Tuesday 25 December 2018


கொண்டாட்டம்

உணர்வுகளின்  உற்சாக எல்லை
மனங்களில் எழும் -மகிழ்ச்சி அலை
எண்ணங்களின்  -நல்லெண்ண நிலை
குறை களையும் -கொண்டாட்ட வேளை  

ஜனனத்தில் ஆரம்பமாகும் கொண்டாட்டம்
வருடா வருடம் வரும் சந்தோசப்  பிறந்த நாள்
பிறந்த குழந்தை பெயர் சூட்டின, அம்மா அப்பா
பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் இன்ப வர பரிமாற்றம்

ஒவ்வொரு மொழிக்கு ஓவ்வொரு கலாச்சாரம்
பண்பாடு சொல்லும் பல நூறு கொண்டாட்டங்கள்
கொண்டாட்டங்கள் வேறு கொடை மட்டும் இன்பம்
முடிவில்லா கொண்டாட்டமே உலகின் இன்ப முகம்

பிள்ளைகளின் கொண்டாட்டம் நல் ஆரோக்கிய சமூகம்
பெற்றோரின்  கொண்டாட்டம் முதியோர் இல்ல குறைவு
உறவுகளின் கொண்டாட்டம் ஒற்றுமையின் தொடக்கம்
பள்ளியின் கொண்டாட்டம் பட்டதாரிகளின் அணிவகுப்பு
காதலின் கொண்டாட்டம் திருமணம்
நட்பின் கொண்டாட்டம் அநாதை உணர்வின் அழிவு
நாட்டின் கொண்டாட்டம் சிறைச்சாலைகளின் நீக்கம்
உலகின் கொண்டாட்டம் ஆயுதங்களின் ஓய்வு

கொண்டாட்டங்கள் நல் இன்ப கொடை
தவிர்க்கக்  கூடாத சந்தோச வரங்கள்
கொண்டாடுங்கள் குறைகள் யாவும் நிறைவாகும்

இதயங்களை இணைக்கும் இன்ப வழி கொண்டாட்டங்கள்    

By Prasanth Satkunanathan 

Tuesday 11 December 2018

#தன்னம்பிக்கை

#தன்னம்பிக்கை 


முடியாது என்று சொல்வது - சொல்பவரின் ஊன எண்ணம்.
முடியும் என்று சொல்வது- உனக்கான வெற்றியின் மூலதனம்.

வலி என்னும் உளி கொண்டுதான் -தன்னம்பிக்கை எனும் சிலை உருவாகும்
தன்னம்பிக்கை தருமெனின்  - வலி எனும் சாபம் கூட வரமாகும்

குழந்தைகளின் குறும்புகளை - குட்டிக்குட்டி ஊனமாக்காதீர்
குழந்தைகளை சலித்துப் பார்க்காது  - சாதனையாளர்களாகப் பாருங்கள்

பிழை விட்டு அறியும் சரியான பாடங்களே - வாழ்க்கையில் மறக்காது நிலைக்கும்
பயந்து உடைவதல்ல பட்டு உணர்வதே வாழ்க்கையின் உயர்வு

பிழைகளை சுட்டிக்காட்டும் போது பணிந்து கேள்
பிழைகளை குத்திக் காட்டும் போது நிமிர்ந்து செல்
இயலாமையின் மொழி குறை பேசுவது!

உனக்கு பிறர் மீதான நம்பிக்கை மாறலாம்  -பிறருக்கு உன் மீதான நம்பிக்கை மாறலாம்
ஆனால் உனக்கு உன்மீதான நம்பிக்கை மாறக்  கூடாது - பிறர் மாற்றவும் விடக் கூடாது

முயற்சியே செய்யாதவன் முயற்சிப்பவனைப் பார்த்து கேலி செய்வான்
கேலியும் கிண்டலும் இயலாமையின் குண இயல்பு
ஆக்கமும் ஊக்கமுமே தன்னம்பிக்கை உணர்வு

தேய்கின்ற நிலவை
நிறுத்த முடியாது
முழுமதியானதும்
சிறைபிடிக்கவும் இயலாது

வாழ்க்கையில் வரும்
துன்பத்தை  துரத்தவும் முடியாது
இன்பத்தை நிறுத்தவும் இயலாது

துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்

தன்னம்பிக்கை என்பது
வெற்றியின் ஊக்கம் 
பயத்தின் நீக்கம்
நேர்மையின் அடையாளம் நேசத்தின் உணர்வாலயம்
அறிவின் ஆக்கம் அறியாமையின் அழிவு
தன்னம்பிக்கியை  - உனக்கு நீயே  - வரம் கொடுக்கும் சாமி

வரம் கொடு வாழக்கை வளமாகும்.

By Prasanth Satkunanathan

Tuesday 13 November 2018

நகைச்சுவை



நகைச்சுவை

சந்தோஷம் என்பது வாழ்க்கையின் மருந்து
நகைச்சுவை என்பது வாழ்க்கையின் சந்தோஷ விருந்து
துன்பத்தின் விடுதலை வழி ,நகைச்சுவைக்கு அடிமையாதல்
நகைச்சுவை உணர்வுடன் , நாளும் இடைவிடா  இன்ப விடியல் 

நகைச்சுவை சிரிப்பொலியே  நட்பின் தேசியகீதம்
நகைச்சுவை உணர்வு  உருவாக்கும் கருவே நட்பு
நகைச்சுவை வரமே நட்பின் குறைவற்ற செல்வம்
நகைச்சுவை மன்னர்கள் ஆளும் ஆனந்த உலகம் நட்பு

கல்வி  திட்டத்தில் இல்லாமலே கற்றது நகைச்சுவை
விடை பெறும்  வேளையில் விழி ஒர கண்ணீர் வலியாக
வலித்தாலும் வாழ்க்கை முழுதும் இன்ப நினைவுகளாக
நகைச்சுவைகள் நினைவானாலும் நிகழ்கால இன்பம்

கஷ்டங்களை கடந்து வர , உருவம் இல்லாத  உறவாக நகைச்சுவை
ஆய கலைகளும் அதிசயமாக பார்க்கும், இன்ப கலை நகைச்சுவை
வீட்டிலும் வெளியிலும், இன்பத்தின் முகவரி ,இன்ப சிரிப்பொலியே
இன்பத்தை மட்டும் வரம்  தரும் நகைச்சுவையாளர்கள் இறைவனாக

வலு கொடுக்கவே நகைச்சுவை வலி கொடுக்க அல்ல
இயலாமையை வைத்து உரு பெறுவதல்ல நகைச்சுவை
இன்பத்தை கூட்டி துன்பத்தை நீக்க கரு பெறுவதே நகைச்சுவை
கண்ணீரை மறைக்கவே நகைச்சுவை உருவாக்க அல்ல

உலகில் வெறுக்க முடியாதவற்றுள் நகைச்சுவையும் ஒன்று
நகைச்சுவை இருந்தால் நீளும் இளமையின் ஆயுட்காலம்
விழித்திரையில் நரை தெரிந்தாலும் மன திரையில் தெரியாது

நகைச்சுவை உணர்வு கொடை , வாழும் வரை இன்ப வரம்

By Prasanth Satkunanathan

Tuesday 30 October 2018

எதிர்பார்ப்பு



எதிர்பார்ப்பு

விழிகளின் எதிர்பார்ப்பு அழகிய காட்சிக்காக


செவிகளின் எதிர்பார்ப்பு இன்னிசை விருந்திற்காக

உடலின் ஓவ்வொரு அணுவிற்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்புகள் எதுவாயினும் இன்பமே பதிலாக ஆசை



இயற்கையை அணைத்தால்  தாயாகக் காக்கும்

இயற்கையை ஆழித்தால் மாறாக தாக்கும்

எதிர்பாக்கும் இடத்தில் எதிர்க்க கூடாது

இல்லையேல் எதிர்பார்ப்பு இன்பமாகாது



எதிர்ப்பார்ப்பு இல்லாத மனிதனால் இயங்கவே முடியாது

எதிர்பார்ப்பு கண் மூடி கனவு காண்பதல்ல களம் காண்பதே

எதிர்பார்ப்புக்களே வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தும் சக்தி

எதிர்பார்ப்பு உயிர்ப்பானது இல்லையேல் வாழ்க்கையே ஊனமாக



உன்னை அறிந்து எதிர்பார்ப்பதே உனக்கு நலம் சேர்க்கும்

உனை வளர்க்காதவை எதிர்பார்க்க கூடாத  எதிர்பார்ப்புக்கள்

தேவையான எதிர்பார்ப்பு நீ விருப்பியபடி வாழ நினைப்பது

தேவையற்ற எதிர்பார்ப்பு பிறர் போல வாழும் பேராசை



எதிர்பார்ப்புகள் உன்னையும் பிறரையும் சிதைக்க கூடாது

எதிர்பார்ப்புக்கள் உன்னை இயக்கவே உன்னை இழக்க அல்ல

உன்னை அறிந்த பின்பே  எதிர்பார்ப்பின் எல்லையை வகு

இறக்கை முளைப்பதல்ல எதிர்பார்ப்பு இறக்கும் வரை வாழ நினைப்பதே 



By Prasanth satkunanathan 

Tuesday 16 October 2018

ப்ரியமான பயணம்!!!

ப்ரியமான பயணம்!!!

சுற்றும் பூமியில் சுற்றி பார்க்க கோடி இடங்கள் 
பலருக்கு பிடித்த விடயம் பிடித்தவருடன் பயணம் 
கடல் தரை வான் என பயணிக்கும் விதம் பலவிதம் 
ஆச்சர்ய சந்தோசங்கள் தொடரும் ப்ரியமான பயணம்!

சொந்தங்கள் சந்திக்க நேரமில்லா அவரச உலகில் 
உடன் பிறந்தவரோடு சந்தோச சங்கமம் பயணம் 
பயணங்கள் செல்லும் பாதையில் திசைகள் பிரிந்தாலும் 
பயண  வேளை பாச உறவுகளை இணைக்கும்  

நண்பர்களோடு பயணம் சுக சுந்தந்திர எல்லை 
சிரிப்பிற்கும்  வேடிக்கைக்கும் இடைவேளை இல்லை 
காதலோடு பயணம் நிஜ உலகம் மறந்த சுக போதை 
முடிக்க விரும்பாது  தொடர இறைவனிடம் கெஞ்சல்

தொலை தூர பயணத்தில் வாகனம் செலுத்துவது 
தொலையும் நேரத்திற்குள் தொல்லைகள் மறக்கும்
உடன் வருபவர் உயிர் காக்கும் கடவுளான உணர்வு 
பயணத்தின் இதய துடிப்பு, கேட்கும் இடைவிடா இசை

மழைக்காலம்   நீண்ட பயணம் 
தெருவின் இரு பக்கமும் மரங்கள் 
தெருவிற்கு கூரை அமைத்தது போல் 
ஒன்றை ஒன்று முத்தமிடுவது போல்
பச்சை இலை மேல் உள்ள மழைத்துளி 
பார்க்கும் போது ஏற்றப்படும் உணர்வு 
விபரிக்க முடியாத பெயரிடப்படாத புதிய உணர்வு 
வானொலியில் இளையராஜாவின்  காதல் பாடல்கள் - ஆகா 
என்ன ஒரு இனிய பிரயாணம் முடிக்க விரும்பாத பயணம் 
என்றென்றும் நெஞ்சில் பசுமையாக

உறவுகளை இன்னும் பலப்படுத்தும் இனிய பயணம் 
பார்க்கும் இடங்கள் பகிரும் உணவுகள் ஆனந்த அனுபவம் 
செல்லும் இடத்தில் கிடைக்கும் சிநேகங்கள் தொடர ஏங்கும் 
பயணங்கள் பலவிதம் ஓவ்வொன்றுமே ப்ரியமான பயணம்!

By Prasanth Satkunanathan


Tuesday 2 October 2018

#கடிதம்.


#கடிதம்.


இதயங்களை இடங்களை இணைத்து 
மொழி அறிவின் ஆயுளை அதிகரித்து
உணர்வும் மொழியும் ஒன்றாக இணைந்த
இணையற்ற உலக தொடர்பாடல் கடிதம்

மன உணர்வுகளின் நிஜ மொழி மாற்றம்
மை கொண்டு எழுதப்படும் மெய் கடிதம்
கையால் எழுதும் கடிதம் அன்பும் அக்கறையும்
உறவை மொழியை அழியாது காக்கும்

சைக்கிள் மணி ஓசை கேட்கும் போதெல்லாம்
மானாக நாம் மாறி துள்ளவது பேரானந்தம்
காகத்தின் கரைதல் கூட காதில் குயில் ஓசை
தபால் காரன் கடவுள் ஆவான் கடிதம் வரமாகும்

கடிதம் எழுதும் நேரம் தேவைகள் மெய்யாகும்
கடிதத்திற்கு காத்திருக்கும் நேரம் சுக வலியாகும்
கடிதம் வாசிக்கும் நேரம் மொழிகள் உயிர் பெறும்
உருவம் இல்லாது  உறவான தொடர்பாடல் கடிதம்

காதலை இணைத்து காதலருக்கு வரமானது
உறவுகளை சேர்த்து உயிரோடு உறவானது
அகிலத்தை இணைத்து தேவைகள் பூர்த்தியானது
கடிதம் காலம் மாறினாலும் மறக்க முடியாத சேவை

By - Prasanth Satkunanathan

Tuesday 18 September 2018

என் சுவாச காற்றே


என் சுவாச காற்றே

நீ இல்லா இடம் பூமியில் இல்லை
நீ இன்றி உயிர்கள் பூமியில் இல்லை
ஐம்பூதங்களில் ஒன்றாய் உயர்வானாய்
பூமியே சுவாசிக்க வரம் தந்த சாமியானாய்

உன்னில் ஒட்சியனை  பிரித்து தந்து
சுவாசிக்க வைத்து பிரியம் வென்றாய்
உலக ஜீவன்களின் உயிர் கொடை வள்ளல்
உலகமே நம்பும் உணர முடிந்த  தெய்வம்

அழகிய பட்டங்கள் காற்றில் பறக்கும் வேளை
அழகிய கனவுகள் கண் முன்னே நிஜமாகின
ஆயிரம் முத்தங்கள் காற்றிற்கு அன்பு பரிசு
காற்றின் அழகிய பயணங்கள் முடிவதில்லை

இயற்கையின் இடைவிடா இலவச காற்றாடி
சூடேற்றி விளையாடும் பகல் நேர காற்று குறும்பு
தாலாட்டி தழுவும் இரவு நேர காற்று இனிமை
இரவும் பகலும் ஊடலும் கூடலுமாய் காதலான  காற்று

இயற்ககையை வேண்டி நின்றால்  அன்பைக்  கொடுக்கும்
இயற்கையை சீண்டிப்  பார்த்தல் அழிவைக்  கொடுக்கும்
மாசு படுத்தின்  பூமி பூகம்பமாய் பதில் தந்து அழிக்கும் 
காற்றை கழிவறையாக்கின் பூமியே கல்லறையாகும்

By Prasanth Satkunanathan ( Heartbeat)

Tuesday 4 September 2018

சமாதானம்



சமாதானம்  

சண்டை இல்லாத  சந்தோச வாழ்விற்காய்
துரோகம் அற்ற  நேர்மையான நேசத்திற்காய்
மிதித்து வாழாத மதிக்கும் மனத்திற்காய்
பிரிவு இல்லாத இணைந்த சமாதானம் தேவை

மனதில் அழுக்கை நீக்க அன்பு பெருகும்
பிறப்பால் நாம் மனிதர்கள் தேவைகள் வேறு
வேறுபாடுகளை அறிதலும் புரிதலும் தேவை
வேறுபாடுகளை மதிக்கின்ற மனமே சமாதானம்

சமாதான அறிவு வீட்டில் ஆரம்பிக்க வேண்டும்
வாழும் சூழலே மனித பண்பை தீர்மானிக்கும்
வீட்டில் சண்டையை தவிர்ப்பது சமாதான முதல் வழி
வீட்டில் சமாதானம் இருப்பின் வெளியிலும் தொடரும்

உறவுக்குள் சமாதானம் உணர்வுகளின் புரிதல் 
உணர்வுகளின் புரிதல் உள்ளங்களை இணைக்கும்
உள்ளங்கள் இணைந்த பின் உறவுக்குள் சந்தோசம்
உறவுக்குள் சமாதானம் உலக சமாதான ஆரம்பம்

வீட்டை தாண்டி  வர துணை வந்த உறவு நட்பு
உதிரம்  பகிராத  பாசம் பகிர்ந்த புதிய உணர்வு
வீட்டை தாண்டியும் தொடரும் அன்பும் காவலும்
நட்புக்குள் சாமாதானமே உலக சமாதான வழி 

மனங்களில் சமாதானம் விதைக்க பட்டால்
வீட்டில் சமாதானம் உறவினை இணைக்கும்
நட்புக்கள் சமாதானம் நாட்டிற்குள் விடுதலை
நாட்டின் சமாதானம் உலக சமாதான சந்தோசம்


By Prasanth Satkunanathan

Wednesday 8 August 2018

#சமையல்



#சமையல்

உணவின்றி உயிர் வாழாது உயிர்கள்
சமைத்துண்டு வாழா உயிர்கள் ஓராயிரம்
ஆறறிவு மனிதனே சமைத்து உண்பவன்
சமையலில் ருசி கூட்டி சுவை அறிந்தான்

சமையல் கற்பனைகளின் கைவண்ணக்  கலை 
மனித நாக்கே சுவை அறிந்த மகா  ரசிகன்
உண்பது ஆனந்தம் உணவு செய்வது பேரானந்தம்
சமையல் இல்லத்திலும் உள்ளத்திலும் சந்தோசம்

வீட்டுச்சமையிலில் முடி சூடா ராணி பெண்கள்
ஆண்கள் கூட அவரசத்திற்கு இடைக்கால ராஜாக்கள்
சமையலில் கைப்பக்குவம் என்பது பசி நீக்கும் சாதனை
வீட்டில் அளந்து சமைப்பதல்ல அன்புபோடு சமைப்பது

சமைத்து வழங்கவும் உணவில் அன்பின் பரிமாற்றம்
சமையல் தரும் ஆத்ம சந்தோசம் உறவுகளின் நெருக்கம்
அன்பும் காதலும் சமையல் வழி தினம் தினம் கூடும்
இணைந்து சமைப்பதில் ஒற்றுமையும் இன்பமும் இரட்டிப்பு

சமையல் என்பது சாதாரணம் அல்ல சாதனை
சமையல் என்பது வியாபார மூலதனம் ஆனால்
அறிந்த கலை மூலம் பணம் சேர்க்கும் வழியாகும்
சமையல் கலை  சந்தோச சாதனை வரம்

சமையல் வழி  அகில சந்தோசம் உணவு
உறவுக்குள் உண்மை உண்ணும் உணவின் வழி
ஒற்றுமை கற்றுத்தந்த சமையல் விருந்துபசாரம்
வீட்டில் அன்பில் பெருக்கம் வெளியில் பணப்  பெருக்கம்

By Prasanth Satkunanathan

Tuesday 24 July 2018



மௌனம் 

தவறைத்  தட்டிக்  கேட்காத மௌனம் 
அதர்மத்தை மொழியால் கொல்லாத அநீதி 
தர்க்கத்தை வளர விடாத மௌனம் 
மொழியை சிறைப்படுத்தி மோதலை தவிர்க்கும்

விழிகள் பேச மொழிகள் மௌனிக்க காதலானது 
மொழிகளின் இடைவேளை இரு இதய நெருக்கம் 
காதல் மௌனத்தில்  காமம் கற்பிக்கப்படும் 
மௌன மொழி மந்திரங்கள் மயக்க இன்பம்

பிறப்பால் ஊமை உணர்வுகள் மொழியானது  
செயல்கள் பேச மொழிகள் ஆச்சர்யம் கொண்டது 
ஒலி உருவாகாத போதும் உண்மை கருவானது 
மொழி இழந்து வாழ்வது சாபமல்ல சாதனை

மொழிகளின் உறக்கம் ஆழ் மனதின் விழிப்பு 
அமைதியான நேரம் மனசாட்சி பேசும் நேரம் 
குழப்பங்கள் தீரும்  நல் முடிவுகள் உதயமாகும்
கற்பனை சிறகு முளைத்து காவியங்கள் உருவாகும்   

பிறர் பேசும் போது கடை பிடிக்கும்  மௌனம்
மரியாதை மட்டுமல்லாது பேசுவதும் மனதில் பதியும்  
அவை நாகரிமும், அடுத்தவரோடு பேசும் போதும் 
மௌனம் என்பது மரியாதையின் அடையாளம்

மொழிகள் பேசாது உள்ளம் பேசும் போது 
காதலும் கவிதையும் உள்ளத்தில்  கருவாகும்
மௌனம் பதிலாக மகிழ்ச்சி பரிசானால் 
மௌனம் கூட உன்னை வளர்க்கும் வழி

By Prasanth Satkunanathan ( HeartBeat)