Tuesday 29 May 2018

காதல் கண்ணன் !!!


காதல் கண்ணன் !!!

ஆயர் பாடியில் பிறந்தவன்
கோகுலத்தில் குடி புகுந்தவன்
இளமை ஆட்கொண்ட இடையன்
இதயம் கவர்ந்த  காதல் கண்ணன்

வண்ணங்கள் ஏங்கும் உன் கரு மேனி
அழகின் இலக்கணத்தை மாற்றிய மாய மேனி
மழை தரா கரு நீல தேகம் உனது
மனதிற்குள் காதல் மழை தந்த மாயன்

மாலையாய் உன் தோள்  சேர மலர்கள் தவம்
மயில் இறகை நீ சூடியதோ மயில் பெற்ற வரம்
உனை அலங்கரித்த யாவுமே அழகுப் பொருளானது
உனை வர்ணித்த வார்த்தைகள் அழகின் அர்த்தமானது

இயற்கையைத்  தாலாட்டும் புல்லாங்குழல் ஓசை
இனிமைக்கு பொருள் சேர்க்கும் இன்னிசை
உன் மூச்சு காற்று கலந்து வரும் ஜீவ இசையில்
இதயத்தில் கருவாகும் ஆத்மீக காதல்

கண்களால் வர்ணிக்க கண்கள் காணாது 
மொழிகளால் சொல்வதற்கு மூச்சு போதாது
அழகால் காதல் ஆட்சி செய்யும் கண்ணா
அன்பால் எனை ஆழும்  நாள் எப்போது மாயவா

By Prasanth Satkunanathan (Heart Beat )

Thursday 17 May 2018

May18 முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!



அடிமையாக இருந்திருந்தால் கூட
அனாதையாக இறந்திரோம்! 

அகிலமே பார்க்கச்  சிதைந்து விழுந்தோம்

 நிர்வாணப்  பிணங்களாக! 

இணையோம்! பிரிவோம்! 

என்றால் பிணங்களே தொடர் புள்ளி...  

இறந்தவர் பேசுகிறோம் 
எங்களை மதிப்பின் இணைந்து வாருங்கள்!

எங்களை வைத்து அரசியலும் ஆதாயமும் தேடுபவர்கள் 

இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு நாள் பார்ப்பவர்களே!  

எங்களை மறவாது நினைத்து நேசிப்பவரே 

உங்களோடு இருப்பவரை மதித்து அணைத்து வாழுங்கள்! 

இன்னொரு முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!  


By Prasanth Satkunanathan.

Tuesday 15 May 2018

விடியல்


விடியல்


கோயில் மணி  அலாரத்திலும்
கொண்டைச்  சேவல் அக்கறையிலும்
விழிகள் திறந்து கொள்ள
விடியல் அழகாய் வர வேற்கிறது

இணைந்தும் தனித்துமாய் பறவைகள்
ஏழிசையில் புது மெட்டு எடுத்து
சுரம் சேர்த்து  சுகம்  தரும் நேரம்
இயற்கை வழங்கும் இலவசக்  கச்சேரி

மெல்ல மெல்ல நேரம் நகர
இருளை உறங்க வைத்து விட்டு
இயற்க்கைக்கு உயிர் தந்து காக்க
கிழக்கில் கதிரவன் கண் விழித்தான்

சூரியக்  கதிர்  கை  நீட்டி
அன்பாய் அழைத்தது வெளியே வா என
உறக்கத்திடம் இருந்து பிரியா விடை பெற்று
வெளியே வந்தால் விடியலின் அழகு வியப்பு

காலைக்  கதிர் கண்களோடு கூடல்
பூக்களின் ஜனனம் புன்னகை
உயிர்களின் தேடல் உற்சாகம்
மெல்லிய காற்று சுக சுவாசம்

இயற்க்கைக்கு உயிர் தந்த விடியல்
கண்களுக்கு விருந்து தந்த விடியல்
உற்சாகம் தன்னம்பிக்கை தந்த விடியல்
இறைவன் எழுதிய அழகிய கவிதை விடியல்

By Prasanth Satkunanathan ( Heartbeat)

Tuesday 1 May 2018

தெய்வக் குழந்தைகள் இன்பவரம்



தெய்வக்  குழந்தைகள் இன்பவரம்

அழுது கொண்டே கண் விழித்தாலும்
மண் வந்த மழலை ஆனந்த வரம்
கைகைளில் தாங்கிய முதல் அனுபவம்
கண்களில் நீர்த்துளி இதழ்களில் புன்னகை

நீண்ட துயில் கொள்ளும் மழலை மாயம்
முகத்தில் நொடிக்கு நொடி மாறும் பாவங்கள்
அழுவதும் சிரிப்பதுமாய் மாறும் ஆனந்த ஆச்சரியங்கள் 
விழி திறந்து பார்க்கக்  காத்திருக்கும் விழி மூடாப்   பெற்றவர்

குழந்தை கண் சிமிட்டும் நொடிகள்
பகல் நேர நட்சத்திரங்களின் தரிசனம்
காந்த விசை தோற்கும் கண்களின் ஈர்ப்பு
நகராது விலகாது நாமெல்லாம் ரசிகராய்

மழலையின் சிரிப்பைக்  கண்டு மறையாத வானவில்
கபடமற்ற சிரிப்பில் கரைந்து போகும் கவலைகள்
யாராலும் வெறுக்க முடியாத விரும்ப்படும்
குழந்தையின் சிரிப்பே பூமியில்  நிஜ அழகு

மழலையின்  குறும்பைக்  கண்டு கோபம் கூட கொஞ்சும்
மண்ணை உண்ட கண்ணனனின் தரிசன அனுபவம்
உணவு நேரப்  போர்க்களம் அழகான ராட்ஷகர்கள் 
வெண்ணை உண்ட கண்ணனாய் கொள்ளை அழகு

அம்மா அப்பா என அடையாளம் தந்து
வாழ்க்கைக்கு அர்த்தமும் சந்தோசமும்  தந்து
அம்மா அப்பா என்று அழைக்கும் நேரம்
ஆனந்த எல்லை வரை கூட்டிச்  செல்லும்
இதை விட இன்பம் ஏது எனப்  பூரிக்க வைக்கும்
தெய்வக்  குழந்தைகள் இன்பவரம்


By Prasanth Satkunanathan - Heartbeat