Tuesday 31 December 2019

2019 ஆம் ஆண்டிற்கு நன்றி!

2019 ஆம் ஆண்டிற்கு நன்றி! 



செல்லும் வருடத்திற்கு சொல்லால் நன்றி சொல்வோம்
வசந்தமோ வருத்தமோ உன்னுள் வாழ்ந்த சுவாசம் வரமே
வாழும் வழி சொல்லி போகும் ஆண்டிற்கு கோடி நன்றி
பிரிகின்ற வலியோடு பிரியாவிடை தருகிறோம் பிரியமான ஆண்டே!

வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு பதில் தந்த ஆண்டு
பல உறவுகள் உடைந்து வாழ்க்கை கேள்வி குறியானது
சில உறவுகள் இணைந்து வாழும் வாழ்வை அர்த்தமாக்கியது
ஆண்டுகள் எங்களை சிதைப்பதில்லை பண்படுத்தும் பாடசாலை

சிலருக்கு வெற்றிகள் மூலம் எதிர்காலத்திற்கான அத்திவாரம்
பலருக்கு தோல்விகள் மூலம் ஏமாற்ற இருள் சூழ்ந்த அஸ்தமனம்
வெற்றி தோல்விகள் எமை ஆட்டிவைக்காது அனுபவம் ஆளவேண்டும்
ஆண்டுக்குள் முழ்கி மூச்சடைப்பதல்ல முத்தெடுப்பதே அனுபவப்பாடம்!

பலருக்கு புதிய பிறப்புகள் மூலம் ஆனந்தம் அள்ளி தந்த வருடம்
பலருக்கு அநியாய இழப்புகள் மூலம் ஆனந்தம் அழித்த வருடம்
ஆண்டுகள் வரமாவதும் சாபமாவதும் மனிதனாய் வாழ்வதில்
மனிதனாய் மாறி வாழ சந்தர்ப்பம் தந்த ஆண்டிற்கு நன்றி

வீட்டையும் நாட்டையும் காக்கும் காவல் தெய்வங்களுக்கு நன்றி
இயற்கையை அழியாது காக்க துடிக்கும் இதயங்களிற்கு நன்றி
மனித மிருகத்தனத்தை கேள்வி கேட்கும் மனதிற்கு நன்றி
அநாதைக்கும் அன்னமிடும் அன்பின் கரங்களுக்கு நன்றி

வரும் வருடங்கள் யாவும் எமை வளப்படுத்தும் ஆய்வு கூடம்
அனுபவங்கள் பல தந்து முன்னேற வழி காட்டும் ஆசான்
செல்லும் வருடம் வரும் வருடத்தை நாம் சந்திக்க வாழ்த்தியது
ஆண்டுகள் பிரிந்தாலும் அனுபவங்கள் பிரியாது தொடரும்

By Prasanth Satkunanathan

Tuesday 17 December 2019

புன்னகை


புன்னகை 



ஒட்டு மொத்த மனித இனத்தின் மகத்தான பெருமை
மனித தனித்துவத்தின் மீது பிற உயிரின்பொறாமை
ஜனனம் முதல் மரணம் வரை அழகின் உயிர்த் துடிப்பு
புன்னகை கழித்து விழி காணாது  மெய் அழகின் தரிசனம்

புன்னகை அழகை தாண்டிய அன்பான வரவேற்பு
இன்பத்தை நிறுத்தி துன்பத்தை துரத்தும் காவலன்
உடல் கொல்லா  உயிர் கொடுக்கும் தொற்று நோய்
புன்னகை வீசின் உயிர் அற்றவையும் உயிர்பெறும்

மழையின் புன்னகையில் தாய்மை உணர்வாய்
தாய்மையின் புன்னகையில் கடவுளை காண்பாய்
தந்தையின் புன்னகையில் நட்பினை அறிவாய்
நட்பின் புன்னகையில் புது உறவே உதயமாகும்

தனிமையில் புன்னகை காதலின் சாட்சி
இசையில் புன்னகை ஸ்வரங்களின் ஆட்சி
உணவில் புன்னகை சுவையின் ஆட்சி
கஷ்டத்தில் புன்னகை மன பலத்தின் சாட்சி

பூக்களோடு புன்னகை காதலுக்கு தூதாகும்
நிலவோடு புன்னகை இருளே இனிமையாகும்
மழையோடு புன்னகை இயற்கை செழிப்பாகும்
இயற்கையோடு புன்னகை வாழ்வே வரமாகும்



By Prasanth Satkunanathan

Tuesday 19 November 2019

பிறந்த வீடு


பிறந்த வீடு 

பிறந்த வீட்டின் நேசம் கருவறை தாண்டா  தாய் வாசம் 
கூரை வீடோ ஓட்டு வீடோ  இன்பம் வெல்லும் துன்பம்
அந்நிய உணர்வறியா அன்பு உணர்வுகள் கலந்த காற்று
வீடு தந்த உறவுகள் நாடு கடந்தாலும் பாசம் கடப்பதில்லை

கருப்பெற்றதும் உருப்பெற்றதும் இங்கே மறக்காது என்றும்
தவழ்ந்த நடந்த வாழ்ந்த இடம் வாழ்வின் வசந்த காலம்
வாழ்க்கையின் நல்லொழுக்க பாடங்கள் கற்ற முதல் வகுப்பறை
உயிர் உடல் கடந்து எமை அணைத்த  உயிர் அற்ற  ஓர் உறவு வீடு

சமையல் அறை வாசம் வீட்டிற்கே முகவரி கொடுக்கும் தனி வாசம்
சாமியறை  நேசம் கடவுள் வழி பாட்டிற்கு வழி சொல்லும் முதல் பாதை
அறை தேர்வில் செல்ல சண்டை பின் சமாதானம் முதல் தேர்தல் களம்
குறும்புகள் கரும்பாக இனித்தது கவலைகள் விடிந்ததும் கலைந்தது

செயற்கை குறைந்த இயற்கை சூழல் வீட்டின் அழகை கூட்டும்
தென்னை மரம் ஏறி சாகசம் , ஊஞ்சல் கட்டி ஆடி சந்தோசம்
வீட்டின் தேவைகள் வீட்டிற்குள்ளேயே கிடைத்த வரமான  வாழ்வு
மரங்கள் நிழலானது பழங்கள் பசி தீர்த்தது  வீடே விருந்தானது

குடும்பத்தின் அழகும் அவசியமும் கற்பித்த முதல் குரு வீடு
வலி நீக்கி வழி காட்டும் நடமாடா  உயிர் நலம் காக்கும் மருந்து வீடு
வளர்ந்த வீடு வாழ்க்கையின் அத்தி வாரம் பிரிகின்ற சாபம் தீரா  வலி
நிஜமான உன்னை காட்டும் நிழல் கண்ணாடி நீ வாழ்ந்த வீடு ஒன்றே

By Prasanth Satkunanathan

Tuesday 5 November 2019

முதுமை


முதுமை


ஆண்டுக்கு ஒரு முறை வரும் இலை உதிர் காலமல்ல
வேகம் குறைந்த உடல் நிலை மாறும் காலம்
மாற்றத்தை ஏற்கும் புதுப்பாடம் ஆரம்பமாகும்
மீண்டும் மழழைபோல் கொடையான கொடுமை

ஆட்சி செய்த அங்கங்கள் அதிகாரம் இழக்கும்
உடல்கள் வடிவம் மாற உள்ளம் வலுப்பெறும்
பாசம் காட்டிய இயற்க்கைக்கு பாரமாய் தோன்றும் 
இயற்க்கை கொடுத்ததை எடுக்கும் காலம்

முதுமையின் யார்தார்த்தங்கள் ஏற்ற பின்
முதுமை என்பது பலருக்கு இன்பக்காலமே
ஆண்டுகள்  கூடிய நீண்ட ஓய்வு விடுமுறை 
அனுபவங்கள் ஆட்சி செய்யும் ஆனந்த காலம்

அறிவு முதல் அனுபவம் வரை கற்கமுடிந்த
பல்கலையும் கற்க முடிந்த பாசமான பல்கலைக்கழகம்
முதுமை என்பது ஒதுக்கி வெறுப்பதல்ல
முதுமையின் வழிகாட்டல் இன்றி இளமையே  தள்ளாடும்

முதுமை என்பது இயற்க்கையின் தெரிவு
முதியோர் இல்லம் அனுப்புவது இதயம் அற்றவர் தெரிவு
அடையாளம் கொடுத்தவரை அனாதையாக்குவது
முதியோர் இல்லம் உருவாவது முடிவில்லா தொடர்புள்ளி

By Prasanth Satkunanathan

Tuesday 15 October 2019

நன்றி


நன்றி 

நன்றி எனும் மூன்றெழுத்தின் சாதனை சாதரணமல்ல - அது 
சந்தோசத்தின் தொடர்புள்ளி சண்டையின் முற்றுப்புள்ளி
நன்றி கூறும் போது உருவாகும் அன்பின் வெளிப்பாடு   -அது
ஓடும் குருதியில் நம்பிக்கை ஒட்டிக்கொள்ளும் உறுதி


நன்றி என்பது வெறும் வார்த்தை அல்ல - அது
வரலாற்றையும் வாழ்க்கையும் மாற்றும் சக்தி கொண்டது
நன்றி அனைவரும் விருப்பும் நல் மனித ஒழுக்கம் 
புராதன காலம் முதல் நவீனம் வரை மாறாத   மனித கலாச்சாரம்


உறவுக்குள் நன்றி ஏன் என்பதெல்லாம் ஊடல் கோபம்
உறவுக்குள்ளும் சொல்லும் நன்றி உடையாத வாழ்தல்
நன்றி என்பது முடியும் வழி அல்ல நல் வழிகளின் ஆரம்பம்
எதிர் பாரா  நன்றியும் சொன்ன பின் உன்னை அணைக்கும்


அறிஞர்கள்  படைப்புகளும்  ஆண்டவனின் அவதாரங்களும் - அதில்
படித்தும் அறியலாம் நன்றியின்  பெருமையும் பயன்களும்
நன்றி என்பது சில சமயம் செயல்களாக வெளிப்படும் - அது
சொல்லை விட ஆழம்  அன்பின் பாஷை புரிந்தவர்க்கு


இயற்கைக்கு நன்றி தாய் போல காக்கும்
பெற்றோர்க்கு நன்றி உன் பிள்ளை உன்னை காக்கும்
உறவுக்கு நன்றி தனிமையை அது நீக்கும்
நட்புக்கு நன்றி அனாதைக்கும் அன்னையாக்கும்
உதவிக்கு நன்றி உனக்குள்ளும் சேவையை விதைக்கும்
நன்றி நம்மை இணைக்கும் மனித கலாச்சாரம்.
நன்றி இல்லா உள்ளம் நம்பிக்கை இல்லா  உலகம்
நன்றியோடு இருப்போம் நன்றியோடு தொடர்வோம்

By Prasanth Satkunanathan

Tuesday 1 October 2019

கனவு


கனவு


கனா விஞ்ஞானமும்  மெய்ஞானமும் இன்னும் விடை தேடும் வினா
பிறப்பு முதல் இறப்பு வரை  கனவுகள் முற்றுப்  பெறுவதில்லை
அறிந்தும் அறியாமலும்  வந்து போகும் ஒட்டாத புது உணர்வு
யாவரும் காணும் தனித்  தனியே பயணிக்கும் புது உலகம் கனவு

உறக்கத்தில் விழித்துக் கொள்ளும் ஆழ்மன ஆசைகளின் அரங்கேற்றம்
உன் பய உணர்வு நீங்கிப் பார் போற்றும் வீரனாய் உனை நீ காண்பாய்.
உன் வெட்கங்கள் விடுபட்டு காதல் வானில் மன்மதனாய் வலம் வருவாய்
நிஜத்தில் சாத்தியம் ஆகாதவை நிழல் உலகில் சாதனை படைக்கும்

பகலிலும் காணும் முழு நிலவின் புன்னகை குழந்தையின் கனவு
காதலை வெளிப்படுத்த ஒத்திகை பார்க்கும் காதல் கலைக்கூடம் கனவு
காலம் கடந்த நினைவுகளை மீட்டிக் காட்டும் திரையரங்கம் கனவு
சந்தோசக் கனவுகள் யாவும் சந்தோச வாழ்விற்கு வழி காட்டும்

எதிர் மறை எண்ணங்கள் எழுச்சி  கொள்ளும் போர்க்களம் கனவு
குழந்தையின் உறக்கத்தை கலைத்து அழவைக்கும் கருணையற்ற கனவு
உறங்கும் மிருகத்தை எழுப்பி நரகத்தை காட்டும் அரக்கக் கனவு
சந்தோசமற்ற கனவுகள் சந்தேகத்தை விதைத்து வாழ்வைக் கேள்வியாக்கும்

உறக்கத்தை கலைக்கும் வெருட்டும் கனவு, உறக்கத்தை வெறுக்கும்
மறந்த கனவுகளை மீட்டி பார்க்கும் போராட்டம் ஏக்கத்தின் மிச்சம்
அதிகாலை கனவு பலிக்கும் , கனவு காணுங்கள், கனவின் அங்கீகாரங்கள்
விழித்திரை தோன்றும் விசித்திர காட்சிகளின் கலையரங்கு கனவு

By Prasanth Satkunanathan

Tuesday 17 September 2019

நிஜம்


நிஜம்


நிஜங்கள் உரையாடும் மொழி செயல்
நிஜ உணர்வுகளின் அறிமுகம் அன்னை
நிஜம் இன்றிய உறவுகள் நிலைப்பதில்லை
நிஜம் இல்லா வாழ்க்கை நிழலான போலி

நிஜமுள்ள உறவுக்குள் முடிவில்லா இதழ் முத்தம்
நிஜமில்லா உறவுக்குள் உடைகின்ற உள யுத்தம்
நிஜமற்ற உறவிற்குள் சந்தேகம் குடிவரும்
நிஜமுள்ள உறவுக்குள் சந்தோசம் கூடிவரும்

நிஜமற்ற அரசியல் தன் வீட்டிற்கு நிதி சேர்க்கும்
நிஜமுள்ள அரசியல் தன்நாட்டிற்காய் நிதம் வாழும்.
நிஜத் தேசப்பற்று தியாக வழி
நிஜமற்ற தேசப்பற்று தீ மூட்டும் வெறி

நிஐமான விஞ்ஞானம் மெய்ஞான சாதனை
நிஐமற்ற விஞ்ஞானம் நோய் கொடுக்கும் வியாபாரம்
நிஜ உழைப்பு என்பது சுயநலம்
நிஜமற்ற உழைப்பு என்பது பொதுநலம்

நியமான கலாச்சாரம் மனிதாபிமான வேலி
நியமற்ற கலாச்சாரம் மதம் தாவும் முடிவிலி
நிஐ சமயம் மனிதனில் கடவுளை காணும்
நிஐமற்ற சமயம் கடவுளே தான் என்று உளறும்

நிஐம் வெற்றிக்கு வழி விடும்
நிஐம் உறவுக்கு பாசம் பகிரும்
நிஐம் உண்மைக்கு ஒளி ஊட்டும்
நிஐமின்றிய சுகம் வாழ்க்கையின் வலி


by Prasanth Satkunanathan

Tuesday 3 September 2019


உழைப்பாளி


சுற்றும் பூமி முதல் துடிக்கும் இதயம் வரை உழைப்புண்டு
உழைப்பின் வழி தீரும் உயிர் வாழ் அடிப்படைத்தேவைகள்
ஆதி முதல் நவீன காலம் வரை உழைப்பிற்கு ஓய்வில்லை
உழைப்பாளி சிந்தும் வியர்வையில் சிறக்கும் வீடும் நாடும்
  
குடும்பத்தின்  நலன் காக்க நாள்தோறும் உழைக்கும் பெற்றோர்
உழைப்பின் வழி பிள்ளைகள் ஆசைகள் தீரும், பேரானந்தம் 
உதிரம் பகிர்ந்தவர்க்காய் உழைப்பது பாசத்தின் பிணைப்பு
குடும்ப கஷ்டங்கள் தீர கடவுள் அமைத்த வழி உழைப்பு 

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உழைப்பாளி
நாம் சுவாசிக்கும்  சூழல் சுகாதாரமாக வரம் கொடுப்பவர் 
தேசத்தை காக்க தேகத்தை  மூலதனமாக்கும் படை வீரர்கள் 
இரத்தம்  சிந்த உழைக்கும் உழைப்பு நாட்டின் சொத்து

சுழலும் பூமியில் அசைவுகள் யாவும் உழைப்பு
சூரிய வருகையில் பயன் பெறும்  பாரில் அனைத்துமே 
வீசும் காற்றில் உயிர்தாகம் தீர்க்கும் புவி உயிர்கள்
மலரும் பூவில் மகரந்தம் பருகி பசியாறும் வண்டுகள்

மனிதனின் உழைப்பு நிகரற்ற  மகிழ்ச்சியின் ஆணிவேர்
உயிர் வாழ உழைப்பது தேவை உடல் தேய உழைப்பது ஆசை
அனுபவிக்கவே  நேரமின்றி  உழைக்கும்   பேராசை தவிர்
உழைப்பே உயிர்ப்பின் அடையாளமும் ஆனந்த வாழ்வும் 

By Prasanth Satkunanathan

Tuesday 20 August 2019

வானொலி


வானொலி


காற்றிற்கு மொழி கொடுத்த முத்தமிழ் ஆசான்
காற்றிற்கு இசை தாகம் ஊட்டிய இசை அருவி
காற்றலையோடு உலா  போகும்  குரல் அமுதம்
உலகெங்கும் உறவான உண்மை தோழன் வானொலி

சமூக அக்கறைக்கான விழி மூடா கடமை
மக்களின் தேவை அறிந்து செய்யும் சேவை
உரையாடல் மூலம் விழிப்புணர்வை தூண்டும்
மக்கள் குரல் ஒலிக்கும் மக்கள் மன்றம் வானொலி

உலகை இணைத்த  முதல் மொழி இணையம் 
மொழி மூலம் விழியில் தோன்றிய காட்சிகள்
பலதரப்பட்ட செய்திகள் பலன்கள் நிறைவாக
பேராபத்தை தவிர்க்கும் பேரன்பு வானொலி   

செவிக்கு இசையால் இன்ப தேன் ஊற்றி
இதயத்திற்கு சுவை ஊட்டும் உணர்வு
கவலைகள் மறந்த தொடரும் பயணத்தில்
துணைவரும் இனிய தோழன் வானொலி

வானொலியின் தொடர் பயணம்
வரும் நேயர்களின் நேச ஆதாரம்
நன்றி எதிர்பாரா பிரியா பிரியம்
நேயர்களின் நேச நாடியில் ஓடும் குருதி வானொலி

பொழுது போக்கோடு பொறுப்பும் நிறைந்தது
அரசியல் பொருளாதாரம் மருத்துவம் கல்வி - என
அனைத்திலும் பங்கெடுக்கும் பயன் கொடுக்கும்
ஓர் இனத்தின் அடையாளமும் அங்கீகாரமும் வானொலி

By Prasanth Satkunanathan

Wednesday 31 July 2019

தாய்மையான நட்பு!!!


தாய்மையான நட்பு!!!


உறவுகளின் தொடக்கம் அம்மா
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்

உணர்வுகளில் கரு உண்ட உறவு நட்பு
நட்பிலும் பகிரும் தாய்மை உணர்வு

தாயின்  கருவறையில்  வாழ்ந்தவரை
தாயின்  மூச்சு காற்றில் சுவாசித்தோம்

இதயவறையில் வைத்த  நட்பு வாழ்கிறது
சுகமான நட்பு சுவாசம் தொடரும் வரை

அம்மா என்ற உறவு அடையாளம் காட்டியது
அனைத்து  உறவுகளையும்

நட்பு என்ற ஒரு உறவில்
அனைத்து உறவுகளையும் காணலாம்

அம்மா இல்லமால் உயிர்கள் இவ் உலகம்
காண்பதற்கு சாத்தியம் இல்லை

நட்பு இல்லாமல் உயிர்கள் எவ் உலகம்
சென்றாலும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை

அம்மா நீ கண்ட பிரசவ வேதனை கூட
நீ உன் பிள்ளையை காண்பதற்கே

உயிர் நட்புகளின் ஒவ்வொரு பிரிவிலும்
உயிர் போகும் வலி தாய் கொண்ட வலி போல
  
அன்னையின் பிரிவில் கூட
அணைக்கும் நட்பு தொடரும் தாய்மை

நண்பர்கள் பிரியலாம் ஆனாலும் நட்பு பிரிவதில்லை
பிரிந்த நட்பின் நினைவிலும்
தொடரும் நட்பின் உயிரிலும்
இணையும் நட்பின் இனிமையிலும்
விலகாத நட்பே வாழ்க்கையின் விருந்து


By Prasanth Satkunanathan