Tuesday 17 September 2019

நிஜம்


நிஜம்


நிஜங்கள் உரையாடும் மொழி செயல்
நிஜ உணர்வுகளின் அறிமுகம் அன்னை
நிஜம் இன்றிய உறவுகள் நிலைப்பதில்லை
நிஜம் இல்லா வாழ்க்கை நிழலான போலி

நிஜமுள்ள உறவுக்குள் முடிவில்லா இதழ் முத்தம்
நிஜமில்லா உறவுக்குள் உடைகின்ற உள யுத்தம்
நிஜமற்ற உறவிற்குள் சந்தேகம் குடிவரும்
நிஜமுள்ள உறவுக்குள் சந்தோசம் கூடிவரும்

நிஜமற்ற அரசியல் தன் வீட்டிற்கு நிதி சேர்க்கும்
நிஜமுள்ள அரசியல் தன்நாட்டிற்காய் நிதம் வாழும்.
நிஜத் தேசப்பற்று தியாக வழி
நிஜமற்ற தேசப்பற்று தீ மூட்டும் வெறி

நிஐமான விஞ்ஞானம் மெய்ஞான சாதனை
நிஐமற்ற விஞ்ஞானம் நோய் கொடுக்கும் வியாபாரம்
நிஜ உழைப்பு என்பது சுயநலம்
நிஜமற்ற உழைப்பு என்பது பொதுநலம்

நியமான கலாச்சாரம் மனிதாபிமான வேலி
நியமற்ற கலாச்சாரம் மதம் தாவும் முடிவிலி
நிஐ சமயம் மனிதனில் கடவுளை காணும்
நிஐமற்ற சமயம் கடவுளே தான் என்று உளறும்

நிஐம் வெற்றிக்கு வழி விடும்
நிஐம் உறவுக்கு பாசம் பகிரும்
நிஐம் உண்மைக்கு ஒளி ஊட்டும்
நிஐமின்றிய சுகம் வாழ்க்கையின் வலி


by Prasanth Satkunanathan

Tuesday 3 September 2019


உழைப்பாளி


சுற்றும் பூமி முதல் துடிக்கும் இதயம் வரை உழைப்புண்டு
உழைப்பின் வழி தீரும் உயிர் வாழ் அடிப்படைத்தேவைகள்
ஆதி முதல் நவீன காலம் வரை உழைப்பிற்கு ஓய்வில்லை
உழைப்பாளி சிந்தும் வியர்வையில் சிறக்கும் வீடும் நாடும்
  
குடும்பத்தின்  நலன் காக்க நாள்தோறும் உழைக்கும் பெற்றோர்
உழைப்பின் வழி பிள்ளைகள் ஆசைகள் தீரும், பேரானந்தம் 
உதிரம் பகிர்ந்தவர்க்காய் உழைப்பது பாசத்தின் பிணைப்பு
குடும்ப கஷ்டங்கள் தீர கடவுள் அமைத்த வழி உழைப்பு 

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உழைப்பாளி
நாம் சுவாசிக்கும்  சூழல் சுகாதாரமாக வரம் கொடுப்பவர் 
தேசத்தை காக்க தேகத்தை  மூலதனமாக்கும் படை வீரர்கள் 
இரத்தம்  சிந்த உழைக்கும் உழைப்பு நாட்டின் சொத்து

சுழலும் பூமியில் அசைவுகள் யாவும் உழைப்பு
சூரிய வருகையில் பயன் பெறும்  பாரில் அனைத்துமே 
வீசும் காற்றில் உயிர்தாகம் தீர்க்கும் புவி உயிர்கள்
மலரும் பூவில் மகரந்தம் பருகி பசியாறும் வண்டுகள்

மனிதனின் உழைப்பு நிகரற்ற  மகிழ்ச்சியின் ஆணிவேர்
உயிர் வாழ உழைப்பது தேவை உடல் தேய உழைப்பது ஆசை
அனுபவிக்கவே  நேரமின்றி  உழைக்கும்   பேராசை தவிர்
உழைப்பே உயிர்ப்பின் அடையாளமும் ஆனந்த வாழ்வும் 

By Prasanth Satkunanathan