Tuesday 19 November 2019

பிறந்த வீடு


பிறந்த வீடு 

பிறந்த வீட்டின் நேசம் கருவறை தாண்டா  தாய் வாசம் 
கூரை வீடோ ஓட்டு வீடோ  இன்பம் வெல்லும் துன்பம்
அந்நிய உணர்வறியா அன்பு உணர்வுகள் கலந்த காற்று
வீடு தந்த உறவுகள் நாடு கடந்தாலும் பாசம் கடப்பதில்லை

கருப்பெற்றதும் உருப்பெற்றதும் இங்கே மறக்காது என்றும்
தவழ்ந்த நடந்த வாழ்ந்த இடம் வாழ்வின் வசந்த காலம்
வாழ்க்கையின் நல்லொழுக்க பாடங்கள் கற்ற முதல் வகுப்பறை
உயிர் உடல் கடந்து எமை அணைத்த  உயிர் அற்ற  ஓர் உறவு வீடு

சமையல் அறை வாசம் வீட்டிற்கே முகவரி கொடுக்கும் தனி வாசம்
சாமியறை  நேசம் கடவுள் வழி பாட்டிற்கு வழி சொல்லும் முதல் பாதை
அறை தேர்வில் செல்ல சண்டை பின் சமாதானம் முதல் தேர்தல் களம்
குறும்புகள் கரும்பாக இனித்தது கவலைகள் விடிந்ததும் கலைந்தது

செயற்கை குறைந்த இயற்கை சூழல் வீட்டின் அழகை கூட்டும்
தென்னை மரம் ஏறி சாகசம் , ஊஞ்சல் கட்டி ஆடி சந்தோசம்
வீட்டின் தேவைகள் வீட்டிற்குள்ளேயே கிடைத்த வரமான  வாழ்வு
மரங்கள் நிழலானது பழங்கள் பசி தீர்த்தது  வீடே விருந்தானது

குடும்பத்தின் அழகும் அவசியமும் கற்பித்த முதல் குரு வீடு
வலி நீக்கி வழி காட்டும் நடமாடா  உயிர் நலம் காக்கும் மருந்து வீடு
வளர்ந்த வீடு வாழ்க்கையின் அத்தி வாரம் பிரிகின்ற சாபம் தீரா  வலி
நிஜமான உன்னை காட்டும் நிழல் கண்ணாடி நீ வாழ்ந்த வீடு ஒன்றே

By Prasanth Satkunanathan

Tuesday 5 November 2019

முதுமை


முதுமை


ஆண்டுக்கு ஒரு முறை வரும் இலை உதிர் காலமல்ல
வேகம் குறைந்த உடல் நிலை மாறும் காலம்
மாற்றத்தை ஏற்கும் புதுப்பாடம் ஆரம்பமாகும்
மீண்டும் மழழைபோல் கொடையான கொடுமை

ஆட்சி செய்த அங்கங்கள் அதிகாரம் இழக்கும்
உடல்கள் வடிவம் மாற உள்ளம் வலுப்பெறும்
பாசம் காட்டிய இயற்க்கைக்கு பாரமாய் தோன்றும் 
இயற்க்கை கொடுத்ததை எடுக்கும் காலம்

முதுமையின் யார்தார்த்தங்கள் ஏற்ற பின்
முதுமை என்பது பலருக்கு இன்பக்காலமே
ஆண்டுகள்  கூடிய நீண்ட ஓய்வு விடுமுறை 
அனுபவங்கள் ஆட்சி செய்யும் ஆனந்த காலம்

அறிவு முதல் அனுபவம் வரை கற்கமுடிந்த
பல்கலையும் கற்க முடிந்த பாசமான பல்கலைக்கழகம்
முதுமை என்பது ஒதுக்கி வெறுப்பதல்ல
முதுமையின் வழிகாட்டல் இன்றி இளமையே  தள்ளாடும்

முதுமை என்பது இயற்க்கையின் தெரிவு
முதியோர் இல்லம் அனுப்புவது இதயம் அற்றவர் தெரிவு
அடையாளம் கொடுத்தவரை அனாதையாக்குவது
முதியோர் இல்லம் உருவாவது முடிவில்லா தொடர்புள்ளி

By Prasanth Satkunanathan