Tuesday, 20 March 2018

மலர்கள்


மலர்கள் 

மலர் மேல் விழி படும் அனுபவம்  
எழுதப்படாத வரிகளுக்கு 
இதயம் மெட்டு இசைத்து பாடும் 
இன்னிசை உணர்வு 

பூமியில் பூக்களின் உதயம் புன்னகை வரம்  
மங்கையர் புன்னகை கற்றது மலர்களிடமே 
இயற்கையின் எழில் மலர்களால் மகுடம் 
பார்வை படும் இடம் எல்லாம் பல வண்ணக்  கோலம் 

காலங்கள் மாறினாலும் மாறாத 
முதல் காதல் பரிசு ஒரு மலரே 
கூந்தலில் சூடும் மலர்கள் 
அழகை மட்டுமல்ல பெண்மையையும் கூட்டும் 

ஆசீர்வாதம் முதல் அனைத்து  கௌரவிப்பிலும் 
முதல் மரியாதை பெறும் மலர்கள் 
சந்தோச துக்க நிகழ்வுகள் அனைத்துமே  
மலர்கள் இல்லாது முழுமை அடைவதில்லை 

ஆடம்பரம் முதல் அனைத்து  சடங்கிலும் 
வலம்  வரும் மலர்களின் ஆயுள் குறைவே 
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பிடித்த மலர்கள் 
குறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்க்கை

By Prasanth Satkunathan ( HeartBeat)

Tuesday, 6 March 2018

இருளும் அழகும்

இருளும் அழகும் 

விண்மீன்கள் விழி திறக்கும் நேரம் 
வான் எங்கும் மயில் இறகாய் கண்கள் 
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் அழகில் 
விடிய விடிய வான் பாடும் காதல் கீதம் 

இருள் வரைந்த அழகிய கோலம் நிலவு 
நிலவின் அழகிற்கு நிறங்களும் அடிமையாகும் 
வான் நிலா உலா வரும் நேரம் 
காதலும் கவிதைகளும் கருப்  பெறும் மண்ணில்

நிசப்தமான இரவுகளில் நிம்மதி வந்தணைக்கும் 
அமைதியான இரவில் இதயம் ஆயிரம் கதை பேசும்  
சத்தம் இன்றிய இரவில் இதய சஞ்சலம் குறையும் 
அமைதி தரும் இரவில் அனைவருமே மௌன விரதம்

இருள் தரும் குளிர் காற்று இன்ப வரம் 
உடல் தழுவும் காற்று உயிரை முத்தமிடும் 
இருள் நேரக்  காற்றில் இதயங்கள் இளைப்பாறும் 
சுவாசம் சுகமாகவும் இருள் சுபமாகும்

இருளின் அழகை தரிசித்த கண்கள்
இனி வந்தணைக்கும் நித்திரை சொர்க்கம்
இருள் தந்த இன்பக்   கொடை உறக்கம் 
இனி இருளில் கனவுகளின் ராச்சியம் ஆரம்பம் 

By Prasanth Satkunanathan ( Heart Beat)

Tuesday, 20 February 2018

#அழகான_குடும்பம்

#அழகான_குடும்பம்


நான் நீ என்று இல்லாது நாம் என்று கூறும்
தனிமை இல்லா தன்னலமற்ற இல்லறம்
இன்பங்கள் பெருகும் துன்பங்கள் பகிரும்
மனித வாழ்வின் நிகரில்லா சந்தோசம் குடும்பம்

கணவன் ,அன்பும் உழைப்பும் ஓய்வதில்லை
மனைவி, மணி பாராது  மனம் விரும்பி சேவை
ஊடல் கூடல் உண்டு , காதல் ஓய்வதில்லை
இருமனம் இணைந்த இல்லறம், இன்பக்  குடும்பம்

அம்மா ,அன்பின் பிறப்பிடம் அன்பே நல்லறம்
அப்பா, பண்பின் உறைவிடம் ஒழுக்கமே உயர்வு
பெற்றவர் சொன்ன பாடம் வெற்றியின் அடித்தளம்
அம்மா அப்பா ,அன்பால் ஆட்சி செய்யும் ஆலயம்,  குடும்பம்

அண்ணா , அக்கா தோழமை உள்ள முதல் ஆசான்
தம்பி , தங்கை செல்ல பிள்ளைகள் விளையாட்டுத்  துணை
செல்ல சண்டைகள் செல்ல கோபங்கள் அன்பில் கரைந்து விடும்
சகோதர சந்தோசம், அன்பான பாதுகாப்பு, அது குடும்பம்

பேரப்பிள்ளை , பாட்டன் பாட்டி உறவுப்  பிணைப்பு
அன்பில் செல்லமும் அழகும் குறைவில்லா நிறைவு
அன்பும் அறிவும்பண்பும் பாதுகாப்பும் நிறைவாக கிடைக்கும்
குடும்பம் இன்பமானால் யாவரும் நலமே

By Prasanth Satkunanathan( Heart Beat)

Tuesday, 6 February 2018

சந்தோசம்

சந்தோசம்

உணர்வுகள் பூக்கும்
அது உள்ளங்களில் தேன் பாய்ச்சும்
எண்ணங்கள் எங்கும் இனிமையாக
நெஞ்சமெல்லாம் சந்தோசம் நிறைந்திருக்கும்

காணும் காட்சியில் கிடைக்கும் சந்தோசம்
விழியில் ஆனந்த ஊற்றாக ,ஆனந்த கண்ணீர்
கேட்கும் ஒலியில், உணரும் சந்தோசம்
இதயத்துடிப்பில் மெட்டெடுத்து இன்னிசை படிக்கும்

பேசும் பேச்சில் பெருகும் சந்தோசம்
மொழியின் இனிமையை, உதிரத்தில் கலக்கும்
மௌனத்தின் உள்ளே, உள்ள சந்தோசம்
மனங்களின் புரிதலை இன்னும் கூட்டும்

கடவுள் தரிசனம் , ஆத்ம  சந்தோசம்
சரியான பாதையில் செல்ல ,தைரியம் ஊட்டும்
உண்ணும் உணவு தரும் ,சந்தோசம்
சுவையும் கூட்டி ,உடல் ஆரோக்கியத்தையும் கூட்டும்

சக மனிதர்கள் தரும் சந்தோசம்
ஒற்றுமையும் ,உலக சமாதானமும் தரும்
உறவுகள் தரும் ,சந்தோசம்
கொடுக்கின்ற சுகத்தை உணர்த்தும்

பூமி எங்கும் சந்தோசம்
புன்னகை கோடி தரும்
சந்தோசம் என்பது தெரிவு
சந்தோசம் தெரிவானால் ,தடை போட
ஏதும் இல்லை, யாருமில்லை!

By Prasanth Satkunanathan ( Heart Beat )

Tuesday, 16 January 2018

இசை

இசை

கடவுளின் உள்ளத்தை கவர்ந்த தேன் மொழி
இறைவனிடம் பேச மந்திரம் தேவை இல்லை
இசை எனும் இனிய மொழி இறைவனை அடைய வழி!

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும்  இசை உண்டு
காற்று  கலந்த எதிலுமே இசை கருப்பெறும்
இசையின் சுவாசம் இதயம் துடிக்கும் வரை

குழந்தையின் சிரிப்பு புன்னகை இசை
மங்கையரின் சிரிப்பு மன்மத இசை
ஆண்களின் சிரிப்பு வீர இசை
இசை மூலமே உணர்வுகளின் நிஜ பரிமாற்றம்

தனிமை நீக்கும் இசை உறவாக
துன்பத்தை நீக்கும் இசை துணையாக
வன்மத்தை நீக்கும் இசை வரமாக
இசை போதும் இங்கு அநாதைகள் யாருமில்லை

உலகை இணைக்கும் உறவு பாலமாய் இசை
உலக சமாதான தேசி கீதம் இசை
யாராலும் வெறுக்க முடியாத , பிரிக்க முடியாத
தாய் போல் அரவணைப்பு இசை


இசை இல்லா வாழ்க்கையில் இன்பம் கசக்கும்
இசை உள்ள வாழ்வில் துன்பமும் நிலை இல்லை
இசை ஒன்றே மனிதனை புனிதனாக்கும்
புனித இசையே பூமியை அழகாக்கும்

By Prasanth satkunanathan ( Heartbeat)


Thursday, 28 December 2017

விண்ணுக்கும் மண்ணுக்கும்


விண்ணுக்கும் மண்ணுக்கும்




பருவ கால மாற்றத்திற்காய் காதல் யாகம்
காலம் கனிந்தால் காதல் யோகம்
காலங்கள் உருண்டாலும் உடையாத காதல்!

மாறாத இளமை குறையாத மோகம்
இடை வெளி கூடினாலும் இறுக்கமான காதல்
இயற்கையின் படைப்பில் இணையற்ற காதல்!

விண்ணும் காதலனாக மின்னலாய் ஆயுத்தம்
இடி முழக்கம் இட்டு தன் வரவை அனுப்பி வைத்தான்
நேரமும் மோகமும் கூடி வர மழையென மாறினான்!

எழிலின் முழு உருவாய் மண்ணவள் காதலியாய்
இயற்கை தோழிகளுடன் எதிர் பார்த்து காத்திருந்தாள்!
விண்ணவன் வரவை தோகை மயில் தூது சொன்னது

வானமே கருமையாய் வானிலே கரு நிலா
இருளினை கூட்டியே இன்ப விழா ஆரம்பம்
மன்மத மழை அணைத்த  அன்பு கூடல்!

விண்ணும் மண்ணும் இட்ட முத்தத்தில் தான்
சந்தோசம் வித்திட்டது இயற்கை புன்னகைத்தது


விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தம் பூமியின் உயிர்கள்



By Prasanth satkunanathan ( Heartbeat)

Sunday, 8 January 2017

காதல் வானிலை

காதல் வானிலை 

இறுக்கத்தில் இடை வெளி குறைய 
விழிகள் நெருங்கி மவுனிக்க 
இதயங்கள்  கட்டி அணைக்க  ஆசை 
நெருக்கத்தில் பருவ பாடம் ஆரம்பம் 
குளிருக்கு இறுக்கி, குளிர் காய தீ 
ஒரே நேரத்தில் குளிர் தீயாய் 
புதுவித வானிலை மாற்றம் #காதல்

BySprasanth