Tuesday, 9 April 2019

காத்திருப்பு


காத்திருப்பு

பிறப்பிற்கும் இறப்பிற்குமான காத்திருப்பே வாழ்க்கை 
இன்பத்தின் அளவு கோல் காத்திருப்பின் இடைவெளி
காத்திருப்பின்றி வலியும் வசந்தமுமும் வெறும் சொற்கள்
காத்திருப்பே தவம் என்றால் மனிதரும் முனிவர்களே 

காத்திருப்பே தீர்மானிக்கும் இயற்கையின் வசந்தம்
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மண்ணிலே வித்து 
மனிதனின் காத்திருப்பு வித்து விருட்ஷமாகி வளம் பெற
காத்திருப்பின்றி இயற்க்கையில் வசந்த வழி இல்லை

கருவான உயிர் உலகை காண்பதற்கான காத்திருப்பு
பத்து மாதம் சுமந்து, சேய் வருகை எதிர்பார்த்து தாய்
அப்பா என அழைக்க, பிள்ளை வர காத்திருக்கும் தந்தை
பிள்ளைக்காக பெற்றவர் காத்திருப்பே பாச இணைப்பு

பள்ளி பரீட்ச்சை  முடிவுக்கான காத்திருப்பு, எதிர்காலம்
பல்கலைகழக படிப்பு, இலட்சிய கனவை எதிர்பார்த்து
எதிர்பார்த்த வேலைக்கான காத்திருப்பு, பண தேடல்
பண தேடலின் எதிர்பார்ப்பு, சந்தோச வாழ்வின்  வழி.

காதலில் காத்திருப்பு, காதலை வலுப்படுத்தும்
பிரிவில் காத்திருப்பு, இதயத்தை புண்படுத்தும்
காத்திருப்பின்றிய காதலில் பிரிதல் முடிவாகும்
காத்திருந்த காதலில் இன்பமே  தினம் முடிவாகும்

கண்களின் காத்திருப்பு வெளிச்சம்
செவிகளின் காத்திருப்பு சப்தம்
இதழ்களின் காத்திருப்பு புன்னகை
உணர்வுகளின் காத்திருப்பு, உடல் தாண்டி உரையாட

மொழியின் காத்திருப்பு உரையாடல்
உரையாடலின் காத்திருப்பு சமாதானம்
சமாதானத்தின் காத்திருப்பு சந்தோசம்
வாழ்க்கையில் காத்திருப்பே சுக சுபம்

தமிழின் காத்திருப்பு அங்கீகாரத்திற்காய்
தமிழரின் காத்திருப்பு தலைவனுக்காய்
தலைவனின் காத்திருப்பு மக்களுக்காய் 
மக்களின்  காத்திருப்பு தாயக விடிவிற்காய்


By Prasanth SatkunanathaN

Tuesday, 26 March 2019

கடல்



#கடல்

கடல் எல்லை கொண்டு கடவுள் வரைந்த கோலம் பூமி 
பூமியின் பெரும் பகுதி தான் என்பதே கடலின் கர்வம்
அலை ஓசை  இயற்கையின் இடைவிடா உயிர்த்தாலாட்டு
தரை வாழ் உயிர்களின் கொடை கடல் வாழ் உயிர்கள்

இயற்கை தந்த இலவச  விருந்தும் மருந்தும் கடல்
கருணையின் உறைவிடம் கர்ணனின் மறு வடிவம்
கடலின் வளங்களும்  கொடுக்கும் கொடையும் கோடி
மீனவர்கள் கொண்டாடி வழி படும் குல சாமி கடல் 

நவீனம் வளர்வதற்கு முன்பே உலகை இணைத்த இணையம்
நாடுகளின் கண்டு பிடிப்பிற்கும் பயணத்திற்கும் பாதையாய்
வணிகம் வளர்வதற்கும் செல்வம் பெருகுவதற்கும் கருவியாய்
கடல் வழி பயணம் என்றென்றும் தொடரும் காதல் பயணம்

கடற்கரை காற்று பூமி தாய் முத்தமிடும் உணர்வு
மீள விரும்பா இறுக்கம் கடல் காற்றின் அணைப்பு
உப்பு நீரில் உயிர் பூக்கும் அதிசயம் கடற்காற்று 
சுற்றுலா பிரியர்கள் சுவாசிக்க விரும்பும் காற்று

வெறுக்க முடியா விரும்பி செல்லும் இடம் கடற்கரை
பொன்மாலை வேளை கண்களுக்கு விருந்தாகும் காட்சி 
இயற்கையின் மேடையில் இறைவனின் வர்ணாஜால வித்தை
கவிதையும் காதலும் கற்பிக்கப்படும் நூலகம் கடற்கரை

உன்னைப் பெற்ற தாய் போல கடல் அன்னை
உனக்கு சுகம் சேர்த்த கடலை அசுத்தம் செய்யாதே
உப்புள்ள கடல் ,உப்பிட்ட கடல், உயிர் போல நினை

இயற்கையே கடவுள், வதைக்காது வணங்குவதே இன்பம்

By Prasanth Satkunananthan

Tuesday, 12 March 2019

இதயம்


இதயம்

கருவறையில் உயிரான அன்பின் அடையாளம்
மனிதம் என்பதன் இன்னொரு பெயர்
துடிப்புள்ள வரைதான் ஆயுளின் பயணம் தொடரும்
இதயம் சொல்லும் போதே இரத்தம் தித்திக்கும் 

உலக காதலின் உயர்வான ஒற்றை அடையாளம்
விழிகள் பார்க்க பறிபோக விரும்பும் திருட்டு
காதல் கருவாகி உயிராகி உறவாகும் ஆலயம்
காதல் இல்லா இதயம் உணர்வில்லா உயிர்

கருவிலேயே கட்டப்பட்ட மனித நீதி மன்றம்
மனசாட்சியை மீறியவர்க்கே மக்கள் நீதி மன்றம்
உனை தீர்மானிக்கும் உணர்வுகளின் உதயம்
இதயம் மௌனித்தால் மனிதம் மரணிக்கும்

உடல் ஆரோக்கியம் வாழ் நாளை கூட்டும்
உள ஆரோக்கியம் ஆத்ம சுகத்தை கூட்டும்
உடலுக்கு தேவை  சத்து உள்ளத்திற்கு தேவை சத்தியம்
துடிக்கும் இதயத்திற்கு நடிக்க கற்று கொடுக்காதீர்கள்  

மனிதரை நேசிக்கும்
மனசாட்சியோடு வாழ வைக்கும்
காதலை கருக்கட்டும்
இசையில் தித்திக்கும்
இயற்கையோடு உறவாடும்
இறைவனை ஆராதிக்கும்
இன்பத்தை அள்ளிக்கொடுக்கும்
இதயத்தோடு பேசுங்கள்
இன்பமே முடிவாகும்

வாழ்க்கை வரமாகும்  

By Prasanth Satkunanathan

Tuesday, 26 February 2019

அழகு



அழகு

விழிகள் வாங்கிய வரம் அழகின் தரிசனம்
உலகில் விழியேற்கும் அத்தனை அழகும் அதிசயம் தான்
அழகு தரும் இன்பம் மேனி எங்கும் தேனாக இனிக்கும்
அழகு அது ஆனந்த நிலை அனுபவிப்பவன் மனிதனுள் கலைஞன்

அணைப்பின் அழகில் அநாதையும் உணரும் தாய்மை
கைகொடுக்கும் கருணையழகில் கடவுள் உன் முன் தோன்றும்
அன்பின் அழகில் வாழ்க்கை வரமாகத் தோன்றும்
விழியால் பார்ப்பது  அழகு விழியற்றோர் பார்க்கும் அழகு பேரழகு

கடலருவி மழையென நீரின் அழகு நீங்கா மன ஈரம்
விலங்குகள் பறவைகளின் அழகு விலங்கிடா சுதந்திர உணர்வு
இருள் பகலின் அழகு இன்ப துன்ப வாழ்க்கைப்பாடம்
இயற்கையின் அழகை அனுபவித்தால் மனிதனில் அழுக்கு விலகும்

மழழை அழகு மனமெங்கும் பாசமழை
குழந்தை அழகில் துளிர்க்கும் மனிதம் கருகுவதில்லை
கண் சமிட்டி சிரிக்கும் பிள்ளை நிலா பேரழகு
குழந்தையின் ஒவ்வொரு அசைவும் கோடி அழகு

இளமை கால அழகு பூமியே சொர்க்கமாய் தோன்றும்
பெண்ணின் அழகில் காதலும் கவிஞரும் கருவாகும்
ஆணின் அழகு வீரமாய் வீட்டோடு நாட்டையும் காக்கும்
இளமை காலம் அழகை ஆழப் பிறந்த காலம்

கண்களுக்கு விருந்தாகும் அழகு நல்லெண்ணங்களுக்கு வித்தாகும்
அதிசயமாக  பார்ப்பது மட்டுமல்ல அன்பால் உணர்வதும் ஆனந்த பேரழகு
அனைத்திலும் அழகைப்பார்ப்பவர் அன்பின் மொழிமாற்றம் அழகென்பார்

அழகை பார்த்து தரம் பிரிக்காது அனைத்திலும் அழகைப்பார்த்து தரம் உயர்வோம்.

By - Prasanth Satkunanathan

Tuesday, 12 February 2019

பால்யகாலம்

பால்யகாலம்


சிறகுகள்-  முளைக்காமல் - சிறகு விரியும்
நொடிக்கு- நொடி -கற்றல்கள் -நிகழும்
கவலைகள்- அற்ற -ஆனந்த காலம்
நினைவில்- நீங்கா வசந்தம்?? பால்யகாலம்

பள்ளிக்கு செல்வது  சற்றே- கசந்தாலும்
பால்ய சிநேகம் -பகிர்ந்த நேரம் -கல்கண்டு
குறும்புகளும் குதூகலமும் - விரும்பும் வம்பு - அதில்
ஆளுமையும் அறிவும் அடையாளம் காணப்படும்

கள்ள மாங்காயும் கள்ளக் கையெழுத்தும்
சிறு பொய்களும் சிறு தண்டனைகளும்
அடிபடுவதும் அணைத்துக் கொள்வதுமாய்
களவும் கற்று மறக்க சொன்ன காலம்

மான்  போல துள்ளி குதித்தது -மகிழும் நட்பு
நட்புடன் கோவம் எனின் தொட்டால் ஊதுவதும்
நட்புடன் நேசமாக விரல்களை அழுத்தி  அன்புமாய்
உடையாத சிநேகம் உயிர் பெற்ற காலம்

மழை நீரில் கப்பல் விடுவதும் நனைவதும்
மண்ணில் வீடுகட்டி உறங்கி மகிழ்வதும்
மீன் தொட்டி , கூட்டில் பறவைகள் சின்ன சின்ன  ஆசைகளாய்
பால்யகால இயற்கையோடான வாழ்வு நோயற்ற வாழ்வு

பால்யகால விளையாட்டுக்கள் விருந்து
கிட்டிப்புல், பம்பரம், பட்டம், அடிச்சுத்தட்டு
கெந்தித் தட்டு, கிளித்தட்டு, போளை அடித்தல் , கண்ணாம்பூச்சி
விளையாட்டுக்கள் ஏராளம் சந்தோசம் தாராளம்

பால்யகால சிநேகம் நண்பர்கள் பிரிந்தாலும் நட்பு பிரியாது
பால்யகால கற்றல்கள் பல்கலைக்கழக அத்திவாரம்
பால்யகாலம் கவலைகளற்ற சந்தோச வரம்

கடந்தாலும் மீண்டும் திரும்ப ஏங்கும் பால்யகாலம்

By - PRASANTH SATKUNANATHAN

Tuesday, 22 January 2019

காதலுடன்!

காதலுடன்!



கண்கள்  இணைந்து  கருக்கட்டிய  காதலை
கண்ணும்  கருத்துமாக  வளர்ப்பது  காதலர் கடமை
காதலுக்கு  பிடித்த  விடயங்களின்  பட்டியல் நீளும்
காதலை  வெளிப்படுத்தும்  விதமே காதலின் ஆயுள்

கடற்கரை  ஓரம்  கை  கோர்த்து  நடக்கும் நேரம்
கடற்காற்று  கலந்த  தந்த  சுவாசம் காதலின் நேசம்
கடல் அலைகள் கால் நனைத்த ஈர சுகம்
மன அலைகள் குளிர்ந்த மாயம் காதல்

நிலவின் ஒளியில் காதல் கண் விழிக்கும்
மொழிகள் இன்றி விழிகள் கவி எழுதும்
இரவின்  மடியில்  விழிகள்  தூக்கமின்றி துடிக்க
நட்சத்திரங்கள்  கண் சிமிட்ட கற்றுக் கொள்ளும்

பூக்களின்  தற்பெருமை  காதலும் மலர்வதால்
காதலதும்  பூக்களதும்  புன்னகை வேறல்ல
காதல் குடி  இருக்க விரும்பும் வீடு பூங்காவனம்
காதலின் பெருமை  மலர்கள்  காதலின் அடையாளம்

இடைவெளி  குறைந்த  இடைவேளை அற்ற
முற்றுப்பெறாத  முழுவதும் மறந்த பயணம்
இசையும்  இணைய இதயம்  இனிக்க இன்பம்
சொர்க்கலோகம்  உலா வரும் காதல் பயணம்

காதலுடன் ஆலய தரிசனம் ஆனந்தம்
காதல் கைகளால் இடும் வீபூதி சந்தானம் இன்பம்
அருகருகாக ஆலய வலம் அன்பு விழா 
சாமி அள்ளி வழங்கும் வரம் அன்பு வளம்

எதிர்பாரா  இன்ப  பரிசில்  பரி மாற்றங்கள்
இரவின்  ஒளியில்  உணவு ஊட்டி மகிழ்தல்
தொலைபேசி  உரையாடி  தொலையும் நேரங்கள்
தனிமை  கூட காதல் கூடும்  காதல் கலையறி

காதல் இருத்தல்  என்பது நிலை
காதலாய் வாழ்தல்  என்பது கலை
காதலின் விருப்பம்  அறி அனுபவம் ஊட்டு

காதலுடன் ஆயுள் தீரும் வரை காதல் தீராது  

By Prasanth satkunanathan

Tuesday, 8 January 2019

வரம்


ஓராயிரம் உயிர்கள் புவியில்  உண்டாயினும்
அறிவும் ஆயுளும் அதிகம் பெற்று
புவித்தாய்  வயிற்றில் கருவுற்ற உயிர்
புன்னகைத்து  உரையாட வரம் பெற்ற மனிதன்

கண்கண்ட முதல் தெய்வமாய் அம்மா அப்பா
உதிரம்  பகிர்ந்த  உடன் பிறந்த  பாச -உறவுகள்
உதிரம் பகிராமலே உயிருக்கு மேலான உறவுகள்
தனிமை நீங்க தலைமுறை வாழ வரம் பெற்ற மனிதன்

ஆனந்த உணர்வாக புன்னகையும் சிரிப்பும்
அதி சந்தோச துக்க  உணர்வாக கண்ணீர்
புரியாத உணர்வை புரிய உணர்வு -மொழியானது
உள் உணர்வை பகிர உரையாட வரம் பெற்ற மனிதன்

நொடிக்கு நொடி மாறும் சூழலும் தேவைகளும்
தினம்  தினம்  பல நூறு  அனுபவங்கள் பரிசாக
கடவுள் உண்டு  இல்லை. நீதி முதல் அநீதி வரை
ஆளுக்கால் மாறும் அனுபவங்கள் மனிதன் பெற்ற வரம்

இயற்க்கை எனும் வீட்டில் குறைவற்ற செல்வம்
அடிப்படை தேவைகளுக்கு  மேலான வளம் அதிகம்
அழகிய  பூமி தாண்டி சொர்க்கம்  தேவை இல்லை
 நிறைவான பூமியும் நிறைந்த கொண்டாட்டங்களும்

மனிதன் கேட்காமலே கிடைத்த விலையற்ற வரங்கள்

By Prasanth Satkunanathan