Tuesday, 17 September 2019

நிஜம்


நிஜம்


நிஜங்கள் உரையாடும் மொழி செயல்
நிஜ உணர்வுகளின் அறிமுகம் அன்னை
நிஜம் இன்றிய உறவுகள் நிலைப்பதில்லை
நிஜம் இல்லா வாழ்க்கை நிழலான போலி

நிஜமுள்ள உறவுக்குள் முடிவில்லா இதழ் முத்தம்
நிஜமில்லா உறவுக்குள் உடைகின்ற உள யுத்தம்
நிஜமற்ற உறவிற்குள் சந்தேகம் குடிவரும்
நிஜமுள்ள உறவுக்குள் சந்தோசம் கூடிவரும்

நிஜமற்ற அரசியல் தன் வீட்டிற்கு நிதி சேர்க்கும்
நிஜமுள்ள அரசியல் தன்நாட்டிற்காய் நிதம் வாழும்.
நிஜத் தேசப்பற்று தியாக வழி
நிஜமற்ற தேசப்பற்று தீ மூட்டும் வெறி

நிஐமான விஞ்ஞானம் மெய்ஞான சாதனை
நிஐமற்ற விஞ்ஞானம் நோய் கொடுக்கும் வியாபாரம்
நிஜ உழைப்பு என்பது சுயநலம்
நிஜமற்ற உழைப்பு என்பது பொதுநலம்

நியமான கலாச்சாரம் மனிதாபிமான வேலி
நியமற்ற கலாச்சாரம் மதம் தாவும் முடிவிலி
நிஐ சமயம் மனிதனில் கடவுளை காணும்
நிஐமற்ற சமயம் கடவுளே தான் என்று உளறும்

நிஐம் வெற்றிக்கு வழி விடும்
நிஐம் உறவுக்கு பாசம் பகிரும்
நிஐம் உண்மைக்கு ஒளி ஊட்டும்
நிஐமின்றிய சுகம் வாழ்க்கையின் வலி


by Prasanth Satkunanathan

Tuesday, 3 September 2019


உழைப்பாளி


சுற்றும் பூமி முதல் துடிக்கும் இதயம் வரை உழைப்புண்டு
உழைப்பின் வழி தீரும் உயிர் வாழ் அடிப்படைத்தேவைகள்
ஆதி முதல் நவீன காலம் வரை உழைப்பிற்கு ஓய்வில்லை
உழைப்பாளி சிந்தும் வியர்வையில் சிறக்கும் வீடும் நாடும்
  
குடும்பத்தின்  நலன் காக்க நாள்தோறும் உழைக்கும் பெற்றோர்
உழைப்பின் வழி பிள்ளைகள் ஆசைகள் தீரும், பேரானந்தம் 
உதிரம் பகிர்ந்தவர்க்காய் உழைப்பது பாசத்தின் பிணைப்பு
குடும்ப கஷ்டங்கள் தீர கடவுள் அமைத்த வழி உழைப்பு 

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உழைப்பாளி
நாம் சுவாசிக்கும்  சூழல் சுகாதாரமாக வரம் கொடுப்பவர் 
தேசத்தை காக்க தேகத்தை  மூலதனமாக்கும் படை வீரர்கள் 
இரத்தம்  சிந்த உழைக்கும் உழைப்பு நாட்டின் சொத்து

சுழலும் பூமியில் அசைவுகள் யாவும் உழைப்பு
சூரிய வருகையில் பயன் பெறும்  பாரில் அனைத்துமே 
வீசும் காற்றில் உயிர்தாகம் தீர்க்கும் புவி உயிர்கள்
மலரும் பூவில் மகரந்தம் பருகி பசியாறும் வண்டுகள்

மனிதனின் உழைப்பு நிகரற்ற  மகிழ்ச்சியின் ஆணிவேர்
உயிர் வாழ உழைப்பது தேவை உடல் தேய உழைப்பது ஆசை
அனுபவிக்கவே  நேரமின்றி  உழைக்கும்   பேராசை தவிர்
உழைப்பே உயிர்ப்பின் அடையாளமும் ஆனந்த வாழ்வும் 

By Prasanth Satkunanathan

Tuesday, 20 August 2019

வானொலி


வானொலி


காற்றிற்கு மொழி கொடுத்த முத்தமிழ் ஆசான்
காற்றிற்கு இசை தாகம் ஊட்டிய இசை அருவி
காற்றலையோடு உலா  போகும்  குரல் அமுதம்
உலகெங்கும் உறவான உண்மை தோழன் வானொலி

சமூக அக்கறைக்கான விழி மூடா கடமை
மக்களின் தேவை அறிந்து செய்யும் சேவை
உரையாடல் மூலம் விழிப்புணர்வை தூண்டும்
மக்கள் குரல் ஒலிக்கும் மக்கள் மன்றம் வானொலி

உலகை இணைத்த  முதல் மொழி இணையம் 
மொழி மூலம் விழியில் தோன்றிய காட்சிகள்
பலதரப்பட்ட செய்திகள் பலன்கள் நிறைவாக
பேராபத்தை தவிர்க்கும் பேரன்பு வானொலி   

செவிக்கு இசையால் இன்ப தேன் ஊற்றி
இதயத்திற்கு சுவை ஊட்டும் உணர்வு
கவலைகள் மறந்த தொடரும் பயணத்தில்
துணைவரும் இனிய தோழன் வானொலி

வானொலியின் தொடர் பயணம்
வரும் நேயர்களின் நேச ஆதாரம்
நன்றி எதிர்பாரா பிரியா பிரியம்
நேயர்களின் நேச நாடியில் ஓடும் குருதி வானொலி

பொழுது போக்கோடு பொறுப்பும் நிறைந்தது
அரசியல் பொருளாதாரம் மருத்துவம் கல்வி - என
அனைத்திலும் பங்கெடுக்கும் பயன் கொடுக்கும்
ஓர் இனத்தின் அடையாளமும் அங்கீகாரமும் வானொலி

By Prasanth Satkunanathan

Wednesday, 31 July 2019

தாய்மையான நட்பு!!!


தாய்மையான நட்பு!!!


உறவுகளின் தொடக்கம் அம்மா
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்

உணர்வுகளில் கரு உண்ட உறவு நட்பு
நட்பிலும் பகிரும் தாய்மை உணர்வு

தாயின்  கருவறையில்  வாழ்ந்தவரை
தாயின்  மூச்சு காற்றில் சுவாசித்தோம்

இதயவறையில் வைத்த  நட்பு வாழ்கிறது
சுகமான நட்பு சுவாசம் தொடரும் வரை

அம்மா என்ற உறவு அடையாளம் காட்டியது
அனைத்து  உறவுகளையும்

நட்பு என்ற ஒரு உறவில்
அனைத்து உறவுகளையும் காணலாம்

அம்மா இல்லமால் உயிர்கள் இவ் உலகம்
காண்பதற்கு சாத்தியம் இல்லை

நட்பு இல்லாமல் உயிர்கள் எவ் உலகம்
சென்றாலும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை

அம்மா நீ கண்ட பிரசவ வேதனை கூட
நீ உன் பிள்ளையை காண்பதற்கே

உயிர் நட்புகளின் ஒவ்வொரு பிரிவிலும்
உயிர் போகும் வலி தாய் கொண்ட வலி போல
  
அன்னையின் பிரிவில் கூட
அணைக்கும் நட்பு தொடரும் தாய்மை

நண்பர்கள் பிரியலாம் ஆனாலும் நட்பு பிரிவதில்லை
பிரிந்த நட்பின் நினைவிலும்
தொடரும் நட்பின் உயிரிலும்
இணையும் நட்பின் இனிமையிலும்
விலகாத நட்பே வாழ்க்கையின் விருந்து


By Prasanth Satkunanathan

Tuesday, 25 June 2019

தண்ணீர்


தண்ணீர்


உயிர் ஆகாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் தண்ணீரே மூலாதாரம்
பஞ்ச பூதங்களில் ஒன்றாய் உலகம் கருவாக உயர்வான காரணி
உலக சமநிலையை பேணுவதில் நிலையான இயற்கை நீதிபதி
தண்ணீர் இன்றிய தரணியில் அணுக்கள் கருவில் கலைந்திருக்கும்

புவி வாழ் உயிர்களின் தவிர்க்க முடியா ஆகாரம் தண்ணீர்
உயிர் தாகம் தொடரும் வரை நீர்த்தாகம் தொடரும்
தண்ணீர் இன்றி தாகம் என்ற பெயரே இல்லை
வறண்ட நாவிற்கு வரமான நீர் சொர்க்கலோக இன்பம்

இயற்கை எழினின் பசுமையின் பாதுகாவலன்
பூத்து குலுங்கும் பல வண்ண பூக்களின் ஆதாரம்
மழை நீரால் மண் நனைத்து நிலம் வனமானாது
இயற்கையின் இதயத்தில் ஓடும் குருதி தண்ணீர்

உலகில் நாட்டினை பிரித்து நீரல்ல பாது காப்பதே நீர்
விலை பேசாது உயிர் மதிப்பறிந்த ஒப்பற்ற பாசம்
பூமியிலும் மனித மேனியிலும் நீரின் அளவே அதிகம் 
உலகில் உயிர்கள் கருகாது காக்கும் உயிர் நாடி  

கடல் வாழ் உயிர்களின் உலகம்
மின்சார உற்பத்தியில் மூலதனம்
விவசாயத்தின் தீர்க்க தரிசி
நீரின் பயன் பாட்டின் பட்டியல் முடிவிலி
நீர் வளம் அனைத்துமே வரம்
உயிரான நீருக்கு விஷம் ஊட்டாதீர்
நீரை மாசுபடுத்தின் நீரின்றி அழிவோம்

By Prasanth Satkunanathan

Tuesday, 14 May 2019

அம்மா!

அம்மா!



ஜனனம் முதல் நான் நீ அனைவரும்
அதிகளவில் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தை அம்மா!
நான் அழ நீ சிரித்த ஒரே நாள் 
நாம் இருவரும் பார்த்து கொண்ட முதல் நொடிகள் மட்டுமே அம்மா!
உயிர் போகும் வலியில் கூட உயிர் தந்து 
நாம் உயிர் போகும் வலி கொடுத்தாலும் உயிராய் நேசிப்பது அம்மா!
எம்மை எல்லாம் படைத்தது, காத்து
கெட்டதை அழித்து அந்த இறைவனுக்கும் இறைவன் அம்மா!

தாயின் மடியில்  தொலைத்த தூக்கம் 
தாயின் சேலையில் கலையாத நிம்மதி 
சேய் அறிய முடியா தாய் மறந்த தூக்கம் 
அழிக்க முடியாத அன்பின்  அடையாளம்

அன்புக்கு பொறுமைக்கு உண்மைக்கு 
அனைத்து நல்ல வார்த்தைகளின் ஒரே உதாரணம் அம்மா!
உண்மையான நேச பரிமாற்றம் 
வேஷம் அற்று வெளிபடையாக பெறுவது நாம் - தருவது அம்மா!
ஆயிரம் மாற்றங்கள் வந்தும் மாறாதது 
காலத்தால் மாற்ற முடியாத மாற்றங்கள் இல்லாதவள் அம்மா!

பெத்தவள் அணைப்பில் 
மரணம் வந்தாலும் 
மறு பரீசிலனை பண்ணும் 
மண்டி இட்டு 
புன்னகை செய்து 
பிரிக்காது பிரியாவிடை பெறும்


இறைவனின் வரமாகவும் இயற்கையின் கொடையாகவும் 
எம்மை காத்து நிற்கின்ற கண் கண்ட தெய்வம் அம்மா!
நாம் எல்லோரும் இணைகின்ற 
ஒரே கலாச்சராம் கருவறை தாங்கிய கோவில் அது தான் அம்மா!

By Prasanth Satkunanathan

Tuesday, 23 April 2019


மனசாட்சியின் மன்றாட்டம்!!!


அன்னை சொல்லி தந்த அன்பு மறந்தாயா
உதிரம் கலந்த உறவுகள் பாசம் தொலைத்தாயா
இனம் மதம் மொழியால் மனிதனை கூறு போட்டு
இதயத்தை கொன்று இன்பத்தை யார் வெல்லுவார்

கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை மாறலாம் -ஆனால்
மனிதத்தை தொலைத்து மத வெறி கொள்வதேன்
கருணையும் அன்பும் தொலைத்தா கடவுள் வழி
இறைவன் பெயரால் இதயத்தை கூறு போடாதே

அன்பின் மொழி அகிலத்தை இணைக்காது 
வெறும் பேசும் மொழி நம்மை பிரிப்பதா
மொழியின் பேர் கொண்டு போர் செய்யாதே
மொழி என்பது வேறுபாடு அது வெறியாகலாகாது

அன்பு என்பது அடுத்தவரை புரிதலும் ஏற்றலுமே
வேறுபாடுகளை விரும்புவதில்தான் அன்பு பகிரும்
உணரும் உணர்வுகளும்  ஓடும் உதிரமும் வேறல்ல
உயிர்பலி எடுக்கவா உயிர் வலி கொடுத்து பிறந்தீர்கள்

உணர்வினை அடிமையாக்கி மிருகமாக்கும் தீவிரவாதம்
உதிரத்தை குடித்து உயிரினை கொன்று போதை ஏறும் 
மனிதம் மரணித்த வெறும் வெறியர்கள் தீவிரவாதிகள்
இதயமற்றவர்ளுக்கு இனம் மதம் மொழி ஏதும் இல்லை

அடுத்தவர் இறப்பிலும் அரசியல் செய்யும் மூடர்கள் பலர்
இறப்பிலும் இனம் மொழி மத அடிப்படியில் கணக்கு பார்ப்பார்
இறப்பிலும் கணக்கு பாரத்து கருத்து கூறும் அறிவு
இதயத்திற்கு வலி கூட்டுவதில்லை ,இன்னும் இறப்பிற்கு வழி காட்டும்



அன்பும் மனிதமும் நிலைக்க வேண்டும் எனின்
மனிதனாய் முதலில் நீ உன்னை அடையாளப்படுத்து
பிள்ளைகளுக்கு மதத்தை விதைக்க முன் மனிதத்தை விதை
ஏற்ற தாழ்வு மன நிலையை குழி தோண்டி புதை
புண்படுத்தும் வார்த்தைகளை மறந்தும் உதிர்க்காதே
பாகுபாடு காட்டி பொறாமையை  தூண்டாதே
உன் சுயநல கருத்துக்களை பொது மேடையில் பரப்பாதே
உணர்வுகளை தூண்டி உயிர்களை கொல்ல   கருத்து கூறாதே
ஆசைகள் கனவுகள் எல்லோருக்கும் உண்டு
நீயும் வாழ் மற்றவர்களையும் வாழ விடு
சக மனித உதிரம் உனக்கு உயிர் போகும் வலி தரவில்லை
உன் கண்ணில் நீர் வரவில்லை எனின் மனிதம் உன்னிலும் இல்லை
மனிதன் மனிதனை கொன்று மனிதத்தை என்றுமே  விதைக்க முடியாது
மனசாட்சியின் மன்றாட்டம் மனசாட்சி தொலைத்து வாழாதே 

By Prasanth Satkunanathan