Wednesday, 8 August 2018

#சமையல்



#சமையல்

உணவின்றி உயிர் வாழாது உயிர்கள்
சமைத்துண்டு வாழா உயிர்கள் ஓராயிரம்
ஆறறிவு மனிதனே சமைத்து உண்பவன்
சமையலில் ருசி கூட்டி சுவை அறிந்தான்

சமையல் கற்பனைகளின் கைவண்ணக்  கலை 
மனித நாக்கே சுவை அறிந்த மகா  ரசிகன்
உண்பது ஆனந்தம் உணவு செய்வது பேரானந்தம்
சமையல் இல்லத்திலும் உள்ளத்திலும் சந்தோசம்

வீட்டுச்சமையிலில் முடி சூடா ராணி பெண்கள்
ஆண்கள் கூட அவரசத்திற்கு இடைக்கால ராஜாக்கள்
சமையலில் கைப்பக்குவம் என்பது பசி நீக்கும் சாதனை
வீட்டில் அளந்து சமைப்பதல்ல அன்புபோடு சமைப்பது

சமைத்து வழங்கவும் உணவில் அன்பின் பரிமாற்றம்
சமையல் தரும் ஆத்ம சந்தோசம் உறவுகளின் நெருக்கம்
அன்பும் காதலும் சமையல் வழி தினம் தினம் கூடும்
இணைந்து சமைப்பதில் ஒற்றுமையும் இன்பமும் இரட்டிப்பு

சமையல் என்பது சாதாரணம் அல்ல சாதனை
சமையல் என்பது வியாபார மூலதனம் ஆனால்
அறிந்த கலை மூலம் பணம் சேர்க்கும் வழியாகும்
சமையல் கலை  சந்தோச சாதனை வரம்

சமையல் வழி  அகில சந்தோசம் உணவு
உறவுக்குள் உண்மை உண்ணும் உணவின் வழி
ஒற்றுமை கற்றுத்தந்த சமையல் விருந்துபசாரம்
வீட்டில் அன்பில் பெருக்கம் வெளியில் பணப்  பெருக்கம்

By Prasanth Satkunanathan

Tuesday, 24 July 2018



மௌனம் 

தவறைத்  தட்டிக்  கேட்காத மௌனம் 
அதர்மத்தை மொழியால் கொல்லாத அநீதி 
தர்க்கத்தை வளர விடாத மௌனம் 
மொழியை சிறைப்படுத்தி மோதலை தவிர்க்கும்

விழிகள் பேச மொழிகள் மௌனிக்க காதலானது 
மொழிகளின் இடைவேளை இரு இதய நெருக்கம் 
காதல் மௌனத்தில்  காமம் கற்பிக்கப்படும் 
மௌன மொழி மந்திரங்கள் மயக்க இன்பம்

பிறப்பால் ஊமை உணர்வுகள் மொழியானது  
செயல்கள் பேச மொழிகள் ஆச்சர்யம் கொண்டது 
ஒலி உருவாகாத போதும் உண்மை கருவானது 
மொழி இழந்து வாழ்வது சாபமல்ல சாதனை

மொழிகளின் உறக்கம் ஆழ் மனதின் விழிப்பு 
அமைதியான நேரம் மனசாட்சி பேசும் நேரம் 
குழப்பங்கள் தீரும்  நல் முடிவுகள் உதயமாகும்
கற்பனை சிறகு முளைத்து காவியங்கள் உருவாகும்   

பிறர் பேசும் போது கடை பிடிக்கும்  மௌனம்
மரியாதை மட்டுமல்லாது பேசுவதும் மனதில் பதியும்  
அவை நாகரிமும், அடுத்தவரோடு பேசும் போதும் 
மௌனம் என்பது மரியாதையின் அடையாளம்

மொழிகள் பேசாது உள்ளம் பேசும் போது 
காதலும் கவிதையும் உள்ளத்தில்  கருவாகும்
மௌனம் பதிலாக மகிழ்ச்சி பரிசானால் 
மௌனம் கூட உன்னை வளர்க்கும் வழி

By Prasanth Satkunanathan ( HeartBeat)

Tuesday, 10 July 2018

நீர்


நீர்

வறட்சியின் நீக்கம் , வனங்களின் , மனங்களின் ஈரம்.
உயிர் தோன்ற , உயிர் வாழ , உலகம் சூழ்ந்தது நீரால்
நீர் வரைந்த அழகிய கோலம் பூமியின் வரைபடம்
இயற்கையின் கொடை நீரின் இன்பங்கள் கோடி

விண்ணுக்கும்  மண்ணுக்குமான விடை பெறா காதல் மழை
விதைகள் விருட்சங்கள் ஆனது விருட்சங்கள் விருந்தானது
மழை நீரின் சுத்தம் இயற்கை அருந்தும் இலவச மருந்து
பூமியின் புன்னகை  புவி தாகம் தீர்க்கும் மழை நீர்

கரை தாண்டி தரை ஏறா கடல் நீர் கருணையின் எல்லை
மீன்களுக்கு இயற்கை வழங்கிய இலவச நீச்சல் குளம்
பிரதி பலன் பாராது உயிர் வாழ அள்ளி வழங்கும் வள்ளல் 
கடல் நீர் உப்பு கரிக்கலாம் , உயிர்களை கருவறுக்காது

நீரால் ஒரு கவிதை  மலையில் இருந்து விழும் அருவி
அலை ஓசையும் அருவி ஓசையும் இசை தாகம் தீர்க்கும்
பனித்துளியும் நீர்த்துளியும் நீரின் காதல் மொழி
இதழ் முத்தம் கூட இனிப்பானது நீரின் காம மயக்கம்

கருணையும் கவலையும் கண்ணீரால் மொழி பெயர்ப்பு
நாவின் நீர் சுவையின் கூட்டல் கிருமிகளின் கழித்தல்
பார்க்கும் இடமெல்லாம் பாரில் நீர், பயனோ பல கோடி
நீ இன்றி உயிருமில்லை உயிர்ப்புமில்லை உலகே இல்லை 

By Prasanth Satkunanathan


Tuesday, 26 June 2018

#சேலை


#சேலை


தமிழ் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாய் தமிழ் மான காப்பாய் தாய் நாட்டின் உயர்வாய் பல வண்ண சேலைகள் நடமாடும் வானவில்லாய் சேலைகள் பூமி எங்கும் புன்னகைக்கும் கோலங்களாய் சேலை அணியும் பெண்கள் யாவருமே மெய்யாகவே விழி வியக்கும் உலக அழகு சேலையின் மதிப்பு விலை அடைப்படையில் மாறலாம் விலை மதிப்பற்ற அழகு என்பது சேலையில் பெண்கள் பெண் தெய்வங்கள் சேலையில் தரும் உணர்வு தாய்மை பெண்கள் சேலையில் வந்தால் லக்ஷ்மி கடாட்ஷம் சேலையில் பெண் தெய்வங்கள் தெய்வீக பேரழகு சேலை கட்டிய பெண்களில் தெய்வம் தெரிவது பெண் பாதுகாப்பு அம்மாவின் சேலை சுக உறக்கம் தந்த ஆனந்த தொட்டில் அம்மாவின் சேலையில் சுவாசமும் வாசமும் அன்பின் எல்லை அம்மாவின் சேலையில் பயமற்ற பாதுகாப்பு வாழ்வு அம்மாவின் சேலை அரவணைப்பு ஆயுட்கால நிகரற்ற ஆனந்தம் பெண் அழகிற்கு பெருமை சேர்த்து பெண் மானத்திற்கு காவல் காத்து உலகெங்கும் தமிழ் அடையாளமாய் வலம் வரும் சேலையின் வரமும் வாழ்வும் பெண்கள் பெற்ற கொடை



By - Prasanth Satkunanathan


Tuesday, 12 June 2018

#கவிதை

#கவிதை 

காதலித்துப்  பார் கவிதை வரும் 
இயற்கையை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
இசையை  கேட்டுப்  பார் கவிதை வரும் 
தனிமையில் இருந்து பார் கவிதை வரும்

உலகத்தை  ரசித்துப்  பார் கவிதை வரும் 
உலகத்தை வெறுத்துப்  பார் கவிதை வரும்
தோல்வி கண்டு பார் கவிதை வரும்
வெற்றி கண்டு  பார் கவிதை வரும்

கடவுளை ஆராதித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராய்ந்து பார் கவிதை வரும்
இளமையை  ரசித்துப்  பார் கவிதை வரும்
முதுமையை மதித்துப்  பார் கவிதை வரும்

உண்மையை  உணர்ந்து பார் கவிதை வரும்
பொய்மையை  விரட்டி பார் கவிதை வரும்
உறவுகளை விரும்பி பார் கவிதை வரும்
உறவுகளை இழந்த பின் பார் கவிதை வரும் 

நீதியாய் நடந்து பார் கவிதை வரும்
அநீதியை கடந்து பார் கவிதை வரும்
நீ கவிதையை ரசித்துப்  பார் கவிதை வரும்

உள் உணர்வுகள் சொற்களாய் மொழி மாறும் 
விழி வழி கண்டவை இனி சொல் வழி காண்பாய்
இதயத்துடிப்பினை இனி எழுத்தினில் உணர்வாய் 
உணர்வும் மொழியும் இணைய கருவாகவும் கவிதை


காட்சிகள் மீது கண்கள் கொண்ட காதல் கவிதை 
இயற்கையை ரசிக்கும் இதயத்தில் உதயம் கவிதை 
விழிகளில் அழகானவை மொழிகளில் பேரழகாகும் 
உருவங்கள் மறைந்தாலும் எழுத்தினில் உயிர்வாழும்


கண்களில் விழுந்து எண்ணங்களில்  மலர்வது கவிதை
உன் கண்களை திறந்து உன் எண்ணங்களிற்கு  வழி விடு
உன்னில் இருந்தும்  தினம் தினம் கோடி  கவி மலர் பூக்கும்

By Prasanth Satkunanathan (HeartBeat)

Tuesday, 29 May 2018

காதல் கண்ணன் !!!


காதல் கண்ணன் !!!

ஆயர் பாடியில் பிறந்தவன்
கோகுலத்தில் குடி புகுந்தவன்
இளமை ஆட்கொண்ட இடையன்
இதயம் கவர்ந்த  காதல் கண்ணன்

வண்ணங்கள் ஏங்கும் உன் கரு மேனி
அழகின் இலக்கணத்தை மாற்றிய மாய மேனி
மழை தரா கரு நீல தேகம் உனது
மனதிற்குள் காதல் மழை தந்த மாயன்

மாலையாய் உன் தோள்  சேர மலர்கள் தவம்
மயில் இறகை நீ சூடியதோ மயில் பெற்ற வரம்
உனை அலங்கரித்த யாவுமே அழகுப் பொருளானது
உனை வர்ணித்த வார்த்தைகள் அழகின் அர்த்தமானது

இயற்கையைத்  தாலாட்டும் புல்லாங்குழல் ஓசை
இனிமைக்கு பொருள் சேர்க்கும் இன்னிசை
உன் மூச்சு காற்று கலந்து வரும் ஜீவ இசையில்
இதயத்தில் கருவாகும் ஆத்மீக காதல்

கண்களால் வர்ணிக்க கண்கள் காணாது 
மொழிகளால் சொல்வதற்கு மூச்சு போதாது
அழகால் காதல் ஆட்சி செய்யும் கண்ணா
அன்பால் எனை ஆழும்  நாள் எப்போது மாயவா

By Prasanth Satkunanathan (Heart Beat )

Thursday, 17 May 2018

May18 முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!



அடிமையாக இருந்திருந்தால் கூட
அனாதையாக இறந்திரோம்! 

அகிலமே பார்க்கச்  சிதைந்து விழுந்தோம்

 நிர்வாணப்  பிணங்களாக! 

இணையோம்! பிரிவோம்! 

என்றால் பிணங்களே தொடர் புள்ளி...  

இறந்தவர் பேசுகிறோம் 
எங்களை மதிப்பின் இணைந்து வாருங்கள்!

எங்களை வைத்து அரசியலும் ஆதாயமும் தேடுபவர்கள் 

இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு நாள் பார்ப்பவர்களே!  

எங்களை மறவாது நினைத்து நேசிப்பவரே 

உங்களோடு இருப்பவரை மதித்து அணைத்து வாழுங்கள்! 

இன்னொரு முள்ளிவாய்க்கால் இனியும் வேண்டாமே!!!  


By Prasanth Satkunanathan.