Tuesday, 25 February 2020

வைத்தியசாலை


வைத்தியசாலை

உயிர் வர , உயிர் வாழ, நாம் பங்கு பெறும் தவிர்க்க முடியா போர்க்களம்
ஆயுளை ஆட்டி வைக்கும் பல நூறு நோய்களின் சர்வாதிகார ஆட்சி
ஒப்பாரி சத்தமும் , சந்தோச சிரிப்பும் ஒரே இடத்தில் கேட்க்கும் முரண்
பார்க்கும் இடம் எல்லாம் வெறுமை முகங்களின் வெப்பம் தாக்கும்

நல்வரவு கூறா இடம் இருந்தும் நாடி செல்லும் மக்கள் கூட்டம் 
விடை பெறும்  போதும் மீண்டும் வருக சொல்லா புதுவித நற்பண்பு
பரபரப்பிற்கு பஞ்சமில்லை நொடிக்கு நொடி மாறும் காட்சிகள் 
பதில் தேடி அலையும் கேள்விக் குறியாகிய பல நூறுமுகங்கள்

ஏற்றத் தாழ்வுகள் மீள் பரிசீலிக்கப்படும்  மனிதம் உயிர்பெறும்
சிலவேளைகளில் நம் நம்பிக்கைகைகள் குற்றுயிராய் கொல்லும் 
கடவுள் இல்லை உண்டு என்ற குழப்பத்தில் கடவுள் பந்தாடப் படுவார்
வாழ்க்கையின் யாதார்த்தத்தை மிக சரியாக உணர்த்தும் உறைவிடம்  

உயிர் மேல் கொண்ட அக்கறையை காட்டும் உலகக் கண்ணாடி    
உயிரின் மதிப்பும் உறவுகளின் உண்மையும் உணர்ந்த இடம் 
உயிர் பிறக்கும் போது கூடிய உறவுகள் சந்தோசத்தைப் பகிர்ந்தது 
உயிர் பிரியும் போது கூடிய உறவுகள் துன்பத்தைக் குறைத்தது 

முதல் மூச்சு எடுத்து  இறுதி மூச்சு விடும் சுவாச வங்கி
இதயமும் சதையும் இங்கே சாதாரண செலவு
தொடர வைக்கும் இதய துடிப்பே சாதனை வரவு
வைத்தியசாலை வாழ்க்கை சொல்லும் கல்விச்சாலை


By Prasanth Satkunanathan