Thursday 22 December 2022

வார்த்தை

 வார்த்தை! 


அன்பை கூட ஆணிவேரோடு அறுக்கும்! 

போர்க்களத்தை கூட பூக்களமாக மாற்றும்!

உனை மீறி வரும் வார்த்தை பிறர் உணர்வை வதைக்க காத்திருப்பவை! 

வார்த்தை சரியாயின் வாழ்க்கை பிழைக்காது! 


#பிரசாந்✍️



Wednesday 21 December 2022

தெரிவு

 தெரிவு!


தோல்வியை தெரிவு செய்பவர்கு

முயற்சியின் ஆயுள், விதியை குற்றவாளியாக்கும் வரை!  

வெற்றியை தெரிவு செய்பவர்க்கு

முயற்சியின் ஆயுள் மதி மழுங்கும் வரை!

இறக்கை இல்லாமலே பறக்கும் மனிதர் நாம்

உடைவது தெரிவல்ல உருவாக்குவதே தெரிவாகும்!


#பிரசாந்✍️



Tuesday 20 December 2022

கோபம்

 கோபம்! 


கோபத்தில் உள்ள நேர்மையும்

கோபத்தின் மீதான புரிதலும் கூட

சுட்டெரிக்கும் என நினைத்த கோபம் 

சுகம் தரும் விடியல் கதிரவனாய்

இதயத்திற்கு பிடித்த இறுக்கமான உறவாய்

நம்பிக்கை நிம்மதி தரும்!  


#பிரசாந்✍️



Thursday 15 December 2022

ஆழ்மனது

ஆழ்மனது!🤯


ஆழ் மன இரகசியம் அன்பாலும் அறிய முடியாது

ஆழ் மனதை அறிந்தவர் யாருமில்லை!

புன்னகைக்குள் புண் பட்ட மனதை பூட்டி வைக்கும்!

ஆழ் மனதை நீ ஆளும் வரை ஆயுள் நீளும்

ஆழ் மனதை பிறர் ஆழ/அறிய நினைத்தால் ஆயுள் முடியும்!


#பிரசாந்✍️





Wednesday 14 December 2022

கர்ப்ப கால வரம்

 கர்ப்ப கால வரம்!💜


தன் தாயை தாண்டிய தாய்மையை ரசிக்க 

சேயாக மாறி செல்ல சேட்டைகள் செய்யும்!

தந்தை தாயாகவும் தாய் சேயாகவும் மாறும்

வலி கடக்க வழியாகும் கர்ப்ப கால வரம்! 


#பிரசாந் ✍️ 


Tuesday 25 February 2020

வைத்தியசாலை


வைத்தியசாலை

உயிர் வர , உயிர் வாழ, நாம் பங்கு பெறும் தவிர்க்க முடியா போர்க்களம்
ஆயுளை ஆட்டி வைக்கும் பல நூறு நோய்களின் சர்வாதிகார ஆட்சி
ஒப்பாரி சத்தமும் , சந்தோச சிரிப்பும் ஒரே இடத்தில் கேட்க்கும் முரண்
பார்க்கும் இடம் எல்லாம் வெறுமை முகங்களின் வெப்பம் தாக்கும்

நல்வரவு கூறா இடம் இருந்தும் நாடி செல்லும் மக்கள் கூட்டம் 
விடை பெறும்  போதும் மீண்டும் வருக சொல்லா புதுவித நற்பண்பு
பரபரப்பிற்கு பஞ்சமில்லை நொடிக்கு நொடி மாறும் காட்சிகள் 
பதில் தேடி அலையும் கேள்விக் குறியாகிய பல நூறுமுகங்கள்

ஏற்றத் தாழ்வுகள் மீள் பரிசீலிக்கப்படும்  மனிதம் உயிர்பெறும்
சிலவேளைகளில் நம் நம்பிக்கைகைகள் குற்றுயிராய் கொல்லும் 
கடவுள் இல்லை உண்டு என்ற குழப்பத்தில் கடவுள் பந்தாடப் படுவார்
வாழ்க்கையின் யாதார்த்தத்தை மிக சரியாக உணர்த்தும் உறைவிடம்  

உயிர் மேல் கொண்ட அக்கறையை காட்டும் உலகக் கண்ணாடி    
உயிரின் மதிப்பும் உறவுகளின் உண்மையும் உணர்ந்த இடம் 
உயிர் பிறக்கும் போது கூடிய உறவுகள் சந்தோசத்தைப் பகிர்ந்தது 
உயிர் பிரியும் போது கூடிய உறவுகள் துன்பத்தைக் குறைத்தது 

முதல் மூச்சு எடுத்து  இறுதி மூச்சு விடும் சுவாச வங்கி
இதயமும் சதையும் இங்கே சாதாரண செலவு
தொடர வைக்கும் இதய துடிப்பே சாதனை வரவு
வைத்தியசாலை வாழ்க்கை சொல்லும் கல்விச்சாலை


By Prasanth Satkunanathan

Tuesday 31 December 2019

2019 ஆம் ஆண்டிற்கு நன்றி!

2019 ஆம் ஆண்டிற்கு நன்றி! 



செல்லும் வருடத்திற்கு சொல்லால் நன்றி சொல்வோம்
வசந்தமோ வருத்தமோ உன்னுள் வாழ்ந்த சுவாசம் வரமே
வாழும் வழி சொல்லி போகும் ஆண்டிற்கு கோடி நன்றி
பிரிகின்ற வலியோடு பிரியாவிடை தருகிறோம் பிரியமான ஆண்டே!

வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு பதில் தந்த ஆண்டு
பல உறவுகள் உடைந்து வாழ்க்கை கேள்வி குறியானது
சில உறவுகள் இணைந்து வாழும் வாழ்வை அர்த்தமாக்கியது
ஆண்டுகள் எங்களை சிதைப்பதில்லை பண்படுத்தும் பாடசாலை

சிலருக்கு வெற்றிகள் மூலம் எதிர்காலத்திற்கான அத்திவாரம்
பலருக்கு தோல்விகள் மூலம் ஏமாற்ற இருள் சூழ்ந்த அஸ்தமனம்
வெற்றி தோல்விகள் எமை ஆட்டிவைக்காது அனுபவம் ஆளவேண்டும்
ஆண்டுக்குள் முழ்கி மூச்சடைப்பதல்ல முத்தெடுப்பதே அனுபவப்பாடம்!

பலருக்கு புதிய பிறப்புகள் மூலம் ஆனந்தம் அள்ளி தந்த வருடம்
பலருக்கு அநியாய இழப்புகள் மூலம் ஆனந்தம் அழித்த வருடம்
ஆண்டுகள் வரமாவதும் சாபமாவதும் மனிதனாய் வாழ்வதில்
மனிதனாய் மாறி வாழ சந்தர்ப்பம் தந்த ஆண்டிற்கு நன்றி

வீட்டையும் நாட்டையும் காக்கும் காவல் தெய்வங்களுக்கு நன்றி
இயற்கையை அழியாது காக்க துடிக்கும் இதயங்களிற்கு நன்றி
மனித மிருகத்தனத்தை கேள்வி கேட்கும் மனதிற்கு நன்றி
அநாதைக்கும் அன்னமிடும் அன்பின் கரங்களுக்கு நன்றி

வரும் வருடங்கள் யாவும் எமை வளப்படுத்தும் ஆய்வு கூடம்
அனுபவங்கள் பல தந்து முன்னேற வழி காட்டும் ஆசான்
செல்லும் வருடம் வரும் வருடத்தை நாம் சந்திக்க வாழ்த்தியது
ஆண்டுகள் பிரிந்தாலும் அனுபவங்கள் பிரியாது தொடரும்

By Prasanth Satkunanathan