Tuesday, 24 July 2018



மௌனம் 

தவறைத்  தட்டிக்  கேட்காத மௌனம் 
அதர்மத்தை மொழியால் கொல்லாத அநீதி 
தர்க்கத்தை வளர விடாத மௌனம் 
மொழியை சிறைப்படுத்தி மோதலை தவிர்க்கும்

விழிகள் பேச மொழிகள் மௌனிக்க காதலானது 
மொழிகளின் இடைவேளை இரு இதய நெருக்கம் 
காதல் மௌனத்தில்  காமம் கற்பிக்கப்படும் 
மௌன மொழி மந்திரங்கள் மயக்க இன்பம்

பிறப்பால் ஊமை உணர்வுகள் மொழியானது  
செயல்கள் பேச மொழிகள் ஆச்சர்யம் கொண்டது 
ஒலி உருவாகாத போதும் உண்மை கருவானது 
மொழி இழந்து வாழ்வது சாபமல்ல சாதனை

மொழிகளின் உறக்கம் ஆழ் மனதின் விழிப்பு 
அமைதியான நேரம் மனசாட்சி பேசும் நேரம் 
குழப்பங்கள் தீரும்  நல் முடிவுகள் உதயமாகும்
கற்பனை சிறகு முளைத்து காவியங்கள் உருவாகும்   

பிறர் பேசும் போது கடை பிடிக்கும்  மௌனம்
மரியாதை மட்டுமல்லாது பேசுவதும் மனதில் பதியும்  
அவை நாகரிமும், அடுத்தவரோடு பேசும் போதும் 
மௌனம் என்பது மரியாதையின் அடையாளம்

மொழிகள் பேசாது உள்ளம் பேசும் போது 
காதலும் கவிதையும் உள்ளத்தில்  கருவாகும்
மௌனம் பதிலாக மகிழ்ச்சி பரிசானால் 
மௌனம் கூட உன்னை வளர்க்கும் வழி

By Prasanth Satkunanathan ( HeartBeat)

Tuesday, 10 July 2018

நீர்


நீர்

வறட்சியின் நீக்கம் , வனங்களின் , மனங்களின் ஈரம்.
உயிர் தோன்ற , உயிர் வாழ , உலகம் சூழ்ந்தது நீரால்
நீர் வரைந்த அழகிய கோலம் பூமியின் வரைபடம்
இயற்கையின் கொடை நீரின் இன்பங்கள் கோடி

விண்ணுக்கும்  மண்ணுக்குமான விடை பெறா காதல் மழை
விதைகள் விருட்சங்கள் ஆனது விருட்சங்கள் விருந்தானது
மழை நீரின் சுத்தம் இயற்கை அருந்தும் இலவச மருந்து
பூமியின் புன்னகை  புவி தாகம் தீர்க்கும் மழை நீர்

கரை தாண்டி தரை ஏறா கடல் நீர் கருணையின் எல்லை
மீன்களுக்கு இயற்கை வழங்கிய இலவச நீச்சல் குளம்
பிரதி பலன் பாராது உயிர் வாழ அள்ளி வழங்கும் வள்ளல் 
கடல் நீர் உப்பு கரிக்கலாம் , உயிர்களை கருவறுக்காது

நீரால் ஒரு கவிதை  மலையில் இருந்து விழும் அருவி
அலை ஓசையும் அருவி ஓசையும் இசை தாகம் தீர்க்கும்
பனித்துளியும் நீர்த்துளியும் நீரின் காதல் மொழி
இதழ் முத்தம் கூட இனிப்பானது நீரின் காம மயக்கம்

கருணையும் கவலையும் கண்ணீரால் மொழி பெயர்ப்பு
நாவின் நீர் சுவையின் கூட்டல் கிருமிகளின் கழித்தல்
பார்க்கும் இடமெல்லாம் பாரில் நீர், பயனோ பல கோடி
நீ இன்றி உயிருமில்லை உயிர்ப்புமில்லை உலகே இல்லை 

By Prasanth Satkunanathan